அரியானாவில் சர்வதேச கீதை திருவிழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கிவைத்தார்


அரியானாவில் சர்வதேச கீதை திருவிழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கிவைத்தார்
x

அரியானாவில், சர்வதேச கீதை திருவிழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கிவைத்தார்.

சண்டிகார்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நேற்று அரியானா மாநிலத்துக்கு சென்றார். குருஷேத்திராவில் உள்ள கிருஷ்ணரின் பிரமாண்ட ரதத்தின் சிலைக்கு அருகே யாகம் செய்தார். பகவத் கீதை புத்தகம் மீது மலர் தூவினார். வேத மந்திரங்கள் முழங்க பிரார்த்தனை செய்தார். அவருடன் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் ஆகியோரும் சென்றனர்.

அரியானா மாநில போக்குவரத்து துறையின் ஆன்லைன் டிக்கெட் திட்டத்தை தொடங்கி வைத்தார். சிர்சா மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி கட்ட காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். பின்னர், சர்வதேச கீதை திருவிழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்.

அதில் அவர் பேசியதாவது:-

பகவத் கீதை, ஒரு சர்வதேச புத்தகம். அது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. யோகா, உலகத்துக்கு இந்தியா அளித்த நன்கொடை என்பதுபோல், கீதையும் ஒட்டுமொத்த மனித இனத்துக்கு இந்தியா அளித்த ஆன்மிக கொடை ஆகும். ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் வாழ்க்கை சட்டமாக கீதை திகழ்கிறது.

பகவத்கீதையில் 700 சரணங்கள் உள்ளன. எல்லா வேதங்களின் சாரமும் அவற்றில் இருக்கின்றன. நடைமுறை வாழ்க்கையில் எழும் அனைத்து சந்தேகங்களுக்கும் அதில் தீர்வு இருக்கிறது. விரக்தியாக இருக்கும்போது நம்பிக்கையை ஊட்டுகிறது.

பகவத் கீதை அளிக்கும் செய்திகளை உள்வாங்கிக் கொள்வது மிகவும் முக்கியம். திலகர், காந்தி போன்ற தலைவர்கள், தங்கள் வாழ்க்கையில் கீதையில் இருந்துதான் வழிகாட்டுதல்களை பெற்றனர். மகாத்மா காந்தி, ஸ்ரீமத் பகவத்கீதையை 'கீதா மாதா' என்றே அழைத்தார். கோழைத்தனத்தை கைவிட்டு, துணிச்சலை கடைபிடிக்க கீதை வழிகாட்டுவதாக சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.


Next Story