டெங்கு- சிக்குன்குனியா காய்ச்சல் பரவலை தடுக்க கர்நாடகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கை; சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு


டெங்கு- சிக்குன்குனியா காய்ச்சல் பரவலை தடுக்க கர்நாடகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கை; சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு
x

கர்நாடகத்தில் டெங்கு-சிக்குன்குனியா காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு:

டெங்கு காய்ச்சல் பரவல்

கர்நாடகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து தீவிரமாக கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கனமழை பெய்து ஓய்ந்த நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நடப்பு ஆண்டில் (2022) ஆகஸ்டு 17-ந் தேதி வரை கர்நாடகத்தில் மொத்தம் 99 ஆயிரம் பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பெங்களூருவில் மட்டும் 1,058 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியானது. இதையடுத்து மைசூருவில் 459 பேருக்கும், உடுப்பியில் 416 பேருக்கும் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

மேலும், டெங்குவுக்கு சித்ரதுர்காவில் 213 பேரும், சிவமொக்காவில் 199 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு 200-க்கும் கீழ் உள்ளது.

28 மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு

கர்நாடகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். வார அடிப்படையில் பாதிப்பு 300-க்கும் மேலாக உள்ளதால், டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என கூறப்படுகிறது.

இதேபோல் 28 மாவட்டங்களில் சிக்குன்குனியா காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 32 ஆயிரம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இதில் 1,120 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சுகாதாரத்துறை உத்தரவு

மாநிலத்தில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா வேகமா பரவி வரும் நிலையில் அதை தடுக்கும் நடவடிக்கையில் கர்நாடக சுகாதாரத்துறை தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக டெங்கு-சிக்குன்குனியா காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி கர்நாடக சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கொசுக்கள் உற்பத்தியை தடுக்க..

அதில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் மழை பெய்து வருவதால் சில பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு ஏடிஸ் கொசுக்களே காரணம். இத்தகைய கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

வீடுகள், உணவகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், கட்டிட கட்டுமான பகுதிகளில் நீர் தேங்கி அதில் இருந்து உற்பத்தி ஆகின்றன. இத்தகைய கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சுற்றுப்புறங்கள் தூய்மை

குடிநீரை சரியான முறையில் வினியோகம் செய்ய வேண்டும். குப்பை கழிவுகளை அகற்றி சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். காலி வீட்டுமனைகளில் குப்பை கழிவுகள் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அந்த கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க உரிய வழிகாட்டுதலை வெளியிட்டு அதை பின்பற்ற மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அவசர தேவைகளின் போது கொசுக்களை அழிக்கும் மருந்துகளை தெளிக்க வேண்டும். கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கொசு வர்த்திகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும். நகரங்களில் தொடர்ந்து தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். நகரங்களில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகும் பகுதிகளை கண்டறிந்து அங்கு தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தும் பணியிலும், தூய்மை பணியிலும் சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story