தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் குடும்பம் ஊழலில் திளைக்கிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் குடும்ப அரசியலும், அவரது குடும்பமும் ஊழலில் திளைத்து வருகின்றன. அந்த குடும்பத்தின் ஊழல்களை விசாரணை அமைப்புகள் கண்காணித்து வருகின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தல்
தெலுங்கானாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பா.ஜனதா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கு முன் கட்சியை பலப்படுத்துவதற்காக மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி மாநில பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி தெலுங்கானா வந்தார். அங்குள்ள வாரங்கல்லில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், அங்கு நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார்.
அப்போது மாநிலத்தை ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ஊழலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வெறும் டிரெய்லர்தான்
2021-ம் ஆண்டு நடந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா பெற்ற வெற்றி, வெறும் டிரெய்லர்தான். மாநிலத்தில் விரைவில் நடைபெறும் தேர்தலில் ஆளும் பி.ஆர்.எஸ். மற்றும் காங்கிரஸ் கட்சிகள் துடைத்து எறியப்படும். தெலுங்கானா மாநிலம் புதிதாக பிறந்ததாக இருக்கலாம். ஆனால் இந்த மாநில மக்கள் இந்திய வரலாற்றில் ஆற்றியிருக்கும் பங்கு மிகப்பெரியது. மத்திய அரசின் திட்டங்களும், முயற்சிகளும் தெலுங்கானாவின் அனைத்து துறைகளிலும் பல்வேறு வழிகளில் பயனளிக்கின்றன. முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் குடும்ப அரசியலும், அவரது குடும்பமும் ஊழலில் திளைத்து வருகின்றன. சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஊழல்களை விசாரணை அமைப்புகள் கண்காணித்து வருகின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
ரூ.6,100 கோடி திட்டங்கள்
இந்த நிகழ்ச்சியில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் முக்கியமாக நாக்பூர்-விஜயவாடா வழித்தடத்தில் மாஞ்சேரியல்-வாரங்கல் இடையே 108 கி.மீ. உள்பட 176 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் ரூ.5,550 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத்தவிர காசிம்பேட்டில் சுமார் ரூ.520 கோடி மதிப்பில் ரெயில்வே உற்பத்தி பிரிவுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக வாரணாசியில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் அருகே உள்ள ஹக்கிம்பேட் விமானப்படை தளத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி கிஷன் ரெட்டி மற்றும் பா.ஜனதா தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் வாரங்கல் சென்றார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு பா.ஜனதா தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பு
இதற்கிடையே வாரங்கலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பத்ரகாளி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருக்கு கோவிலில் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. அங்குள்ள கோசாலையில் பராமரிக்கப்படும் பசுக்களுக்கு பிரதமர் மோடி உணவு வழங்கினார்.
பிரதமர் மோடியின் தெலுங்கானா பயணத்தை ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி புறக்கணித்தது. அந்தவகையில் பிரதமரை வரவேற்கும் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் பங்கேற்கவில்லை.
தெலுங்கானா விவகாரத்தில் பிரதமரின் மனதில் விஷம் இருப்பதால் அவரது நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக ஆளுங்கட்சியின் செயல் தலைவரும், மந்திரியுமான கே.டி.ராமாராவ் முன்தினம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.