பி.ஜி.எம்.ஐ. செயலிக்கும் தடை... - பப்ஜி விளையாட்டு பிரியர்கள் அதிர்ச்சி..!'


பி.ஜி.எம்.ஐ. செயலிக்கும் தடை... - பப்ஜி விளையாட்டு பிரியர்கள் அதிர்ச்சி..!
x

கோப்புப்படம் 

பப்ஜியின் அவதாரமான பி.ஜி.எம்.ஐ செயலிக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மொபைல் போனில் மூழ்கிய இளைஞர்களை வெகுவாக தனக்குள் மூழ்கச்செய்ததுதான் பப்ஜி. கொல்லு... சுட்டுத்தள்ளு என ஆக்ரோஷமாக இளைஞர்கள் முழங்க பப்ஜி வன்முறை பாதைக்கு வழிநடத்துகிறது என விமர்சனங்கள் தொடர்ந்தது.

2020 ஜூலையில் எல்லையில் இந்தியா-சீனா வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்ட போது, பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு தடைவிதித்தது மத்திய அரசு.

தரவுகள் திருட்டு, பயனர்களின் தனி விவரங்கள் கசிவு குற்றச்சாட்டில் பப்ஜி உள்பட 118 செயலிகள் முடங்கின. பப்ஜிக்கு தடைவிதிக்கப்பட்டது பலரை எப்பா நிம்மதி என பெருமூச்சுவிட செய்தது. அப்போது சீனாவுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக கூறிய தென் கொரிய நிறுவனமான பப்ஜி கார்பரேஷன், 2021 ஆம் ஆண்டு பட்டல்கிரவுண்ட் மொபைல் இந்தியா என்ற கேமை வடிவமைத்தது, இந்தியாவுக்காக வெளியிட்டது.

இதுதான் பப்ஜியின் அவதாரமான இந்திய பப்ஜி. பப்ஜி போன விரக்தியிலிருந்த விளையாட்டு பிரியர்கள், நிம்மதியென தங்கள் வேலையை செய்ய தொடங்கிவிட்டார்கள். ஒரு கோடிக்கும் அதிகமானோர் செயலியை தரவிறக்கம் செய்து விளையாடிய நிலையில், சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் பப்ஜி விளையாட தடை விதித்த தாயை 16 வயது சிறுவன் சுட்டுக்கொன்ற செய்தியும் செவிகளுக்கு வந்தடைந்தது

இப்படி பப்ஜி பிரியர்களுக்கு பாய்சன் கலந்த பாயாசமாக வந்த இந்திய பப்ஜிக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது அவர்களை சோகமாகியிருக்கிறது. இந்திய பப்ஜி செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கூகுள் நிறுவனம், இந்திய அரசின் உத்தரவுப்படி செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் சிறுவன் தாயை சுட்டுக் கொன்ற சம்பத்தை அடுத்து இந்திய பப்ஜிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இதுகுறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில் அளிக்கையில், தடை செய்யப்பட்ட செயலிகள் புதிய பெயரில் வெளியாவது கவலை அளிக்கிறது. இவைகளை ஆய்வுசெய்ய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே தேச பாதுகாப்பை சுட்டிக்காட்டி 300-க்கும் அதிகமான சீன செயலிகளுக்கு தடை விதிக்க பிரயோகித்த தொழில்நுட்பச் சட்ட பிரிவு 69ஏ-யை அரசு பயன்படுத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. தடை செய்யப்பட்டதற்கு காரணம் என்னவோ? ஆனால் செயலி இல்லாமல் போனது தூங்கி எழுந்த பப்ஜி பிரியர்களை ஒட்டுமொத்தமாக தூக்கிவாரிப்போட்டுள்ளது. மாற்று செயலியை தேடச் செய்திருக்கிறது.



Next Story