நாடாளுமன்ற தேர்தல்; டெல்லியில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி: கெஜ்ரிவால் அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தல்; டெல்லியில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி:  கெஜ்ரிவால் அறிவிப்பு
x

டெல்லியில் கூட்டணி அமைப்பது பற்றி காங்கிரசுடன் பேசி வருகிறோம். தொகுதி பங்கீடு பற்றியும் ஆலோசனை நடத்தி வருகிறோம் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என இரண்டு கட்சிகளும் இடம் பெற்று உள்ளன. எனினும், தேசிய கட்சியான காங்கிரசுடன், பிற கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு செய்வதில் உடன்பாடு இல்லாமல் காணப்படுகிறது.

இதன்படி, பஞ்சாப்பில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவாலிடம், டெல்லியில் காங்கிரசுடனான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், அடுத்த 2 முதல் 3 நாட்களில் என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே அதில் நிறைய காலதாமதம் ஏற்பட்டு விட்டது. முன்பே அது நடந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கூட்டணி பற்றி கெஜ்ரிவால் குறிப்பிடும்போது, பஞ்சாப்பில் கூட்டணி இல்லை என்பதற்காக இரு கட்சிகளுக்கும் இடையே பகைமை எல்லாம் இல்லை. டெல்லியில் கூட்டணி அமைப்பது பற்றி காங்கிரசுடன் பேசி வருகிறோம். தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை நடத்தி வருகிறோம். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி இல்லையென்றால், பா.ஜ.க. தேர்தலை எளிதில் எடுத்து கொள்ளும் என கூறினார்.

ஆனால், டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி இன்று கூறும்போது, டெல்லியில் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி எனக்கு தெரியாது. நான் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என கூறினார்.


Next Story