கனடா நாட்டில் இந்திரா காந்தி படுகொலையை சித்தரிக்கும் காட்சி ஊர்தியுடன் சீக்கியர்கள் பேரணி கனடாவிடம் பிரச்சினை எழுப்ப வெளியுறவு மந்திரிக்கு காங்கிரஸ் வேண்டுகோள்


கனடா நாட்டில் இந்திரா காந்தி படுகொலையை சித்தரிக்கும் காட்சி ஊர்தியுடன் சீக்கியர்கள் பேரணி கனடாவிடம் பிரச்சினை எழுப்ப வெளியுறவு மந்திரிக்கு காங்கிரஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 Jun 2023 11:15 PM GMT (Updated: 8 Jun 2023 11:15 PM GMT)

இந்திரா காந்தி படுகொலையை சித்தரிக்கும் காட்சிகளைக் கொண்ட ஊர்தியுடன் கனடாவில் சீக்கியர்கள் நடத்திய பேரணி அதிர வைத்துள்ளது.

புதுடெல்லி,

இந்திரா காந்தி படுகொலையை சித்தரிக்கும் காட்சிகளைக் கொண்ட ஊர்தியுடன் கனடாவில் சீக்கியர்கள் நடத்திய பேரணி அதிர வைத்துள்ளது. இதுகுறித்து கனடா நாட்டிடம் பிரச்சினை எழுப்புமாறு வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31-ந் தேதி டெல்லியில் சப்தர்ஜிங் சாலையில் உள்ள தனது இல்லத்தில் சீக்கிய மெய்க்காவலர்கள் சத்வந்த் சிங்காலும், பியாந்த் சிங்காலும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காலிஸ்தான் ஆதரவு இயக்கம் நடந்தி வந்த சீக்கிய பிரிவினைவாதி பிந்தரன்வாலேயும், அவரது ஆதரவாளர்களும் பஞ்சாபில் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் பதுங்கி இருந்தபோது, அவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு 1984-ம் ஆண்டு, ஜூன் 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 'ஆபரேஷன் புளூ ஸ்டார்' என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு இந்திரா காந்தி உத்தரவிட்டதால், அவர் படுகொலை செய்யப்பட்டார் என தெரிய வந்தது.

இந்தப் படுகொலையைச் சித்தரிக்கும் வகையிலும், கொண்டாடும் வகையிலும், சீக்கியர்கள் திரளாக வசிக்கிற கன்டாவில் பிராம்ப்டன் நகரில் கடந்த 4-ந் தேதி பேரணி நடந்தது. சீக்கியர்கள் நடத்திய இந்தப் பேரணியில், காலிஸ்தான் கொடிகளுடன், இந்திரா காந்தி படுகொலையைச் சித்தரிக்கும் காட்சிகள் கொண்ட ஊர்தி இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது.

இந்தப் பேரணி பற்றி இந்தியாவுக்கான கனடா நாட்டின் தூதர் கேமரூன் மேக்கே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "கனடாவில் வெறுப்புணர்வுக்கோ, வன்முறையைப் போற்றிப்புகழவோ இடம் இல்லை. இந்தச் செயல்களுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடந்த இந்தப் பேரணி பற்றிய வீடியோவை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மிலிந்த் தியோரா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டு ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

கனடாவில் இந்திரா காந்தி படுகொலையைச் சித்தரிக்கும் வகையில் 5 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடந்தது குறித்து அறிந்து ஒரு இந்தியராக நான் திகைத்துப்போனேன். இதுநாட்டின் வரலாறு மீதான மரியாதை, பிரதமரின் படுகொலையினால் ஏற்பட்ட வலி தொடர்பானது ஆகும். இந்தத் தீவிரவாதச்செயல், உலகளவிலான கண்டனத்துக்கும், ஒன்றுபட்ட பதிலடிக்கும் தகுதியானது ஆகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மிலிந்த் தியோராவின் டுவிட்டர் பதிவை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரமேஷ் 'டேக்' செய்துள்ளார். அதில் அவர், "மிலிந்த் தியோரின் கருத்தை நான் முற்றிலுமாய் ஏற்கிறேன். இந்த விவகாரத்தை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், கனடா அதிகாரிகளிடம் எழுப்ப வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story