டிரோன்கள் மூலம் ஆயுதங்கள்; பாகிஸ்தான் சதியை முறியடிக்க இந்தியா அதிரடி நடவடிக்கை; பரபரப்பு தகவல்கள்


டிரோன்கள் மூலம் ஆயுதங்கள்; பாகிஸ்தான் சதியை முறியடிக்க இந்தியா அதிரடி நடவடிக்கை; பரபரப்பு தகவல்கள்
x

எல்லைதாண்டி தாக்குதல் நடத்துவதற்கு டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் போடும் பாகிஸ்தான் சதியை முறியடிக்க இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜம்மு,

அந்த வகையில் இதுவரை 12 முறை, பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஆயுதங்கள், ஒட்டும் குண்டுகள் (கையெறி குண்டுகள் உள்ளிட்டவை) மற்றும் பிற தளவாடங்களை தங்கள் தரப்பில் நாசவேலைகளை அரங்கேற்றுகிறவர்களுக்கு டிரோன்கள் மூலம் போட்டுச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதற்கான வியூகங்களை இந்திய ராணுவம் வகுத்தது. அதன்படி காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் 'அக்குவா ஜாமர்'கள், 'மல்டி-ஷாட் கன்'கள் என்று அழைக்கப்படுகிற அதிநவீன துப்பாக்கிகள் போன்ற தளவாடங்களை ராணுவம் நிறுவி உள்ளது.

இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:-

காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், பாகிஸ்தான் எல்லையில் இருந்து 400 மீட்டர் தொலைவில் நவீன மற்றும் அதிநவீன தொழில் நுட்ப கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. டிரோன் மூலம் ஆயுதங்களை அனுப்பும் பாகிஸ்தானின் சதிக்கு பதிலடியாக 'அக்குவா ஜாமர்'களும், 'மல்டி-ஷாட்' துப்பாக்கிகளும் அமையும்.

தற்போது, இந்திய எல்லைக்குள் ஆயுதங்களை போடுகிற பாகிஸ்தானின் சதியை இந்தியா பலமுறை முறியடித்துள்ளது. பறந்து வந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தி அவற்றில் இருந்து ஒட்டும் குண்டுகளையும், ஐ.இ.டி. என்னும் நவீன வெடிக்கும் சாதனங்களும், வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த 'அக்குவா ஜாமர்'களை பொருத்தமட்டில் அவை 4 ஆயிரத்து 900 மீட்டர் தொலைவிலேயே டிரோன்கள் நடமாட்டத்தை கண்காணிப்பது மட்டுமின்றி, அவற்றின் செயல்பாட்டையும் முடக்கும் திறன் கொண்டுள்ளது. பாகிஸ்தான் எந்த வடிவில் இந்தியாவினுள் ஆயுதங்களை கடத்தி தாக்குதலுக்கு சதி செய்தாலும், அவை யாவற்றையும் இந்திய ராணுவம் அதிநவீன கருவிகளை பொருத்தி முறியடிக்கும்.

டிரோன்களை சுட்டு வீழ்த்தும் ஆற்றல் 'மல்டி-ஷாட்' துப்பாக்கிகளுக்கு உண்டு. டிரோன்கள் நடமாட்டத்தை 'அக்குவா ஜாமர்' கண்டறிந்த உடனேயே இந்த 'மல்டி-ஷாட்' துப்பாக்கிகளை கொண்டு சுட்டு வீழ்த்தி விட முடியும்.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கண்காணிப்பு மையங்கள், அதிநவீன 'பி.டி.இசட்' கேமராக்கள், தெர்மல் இமேஜர்கள் என அதிநவீன தளவாடங்கள், எல்லையில் மேற்கொள்ளப்படுகிற ஒவ்வொரு நடவடிக்கையையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இதனால் பூகோள சூழல்களை சாதகமாக்கி எந்த விஷம செயல்களையும் பாகிஸ்தான் செய்யவில்லை.

காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அதிநவீன தளவாடங்களை நிறுவிய நிலையில், இதேபோன்ற தளவாடங்கள் சர்வதேச எல்லை பகுதிகளிலும் நிறுவப்படும் என எதிர்பார்க்கிறோம். இதனால் பாகிஸ்தானின் டிரோன் ஆயுதக்கடத்தல் சதியை முறியடித்து விடலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story