அனைத்துக்கட்சி குழுவினர் மணிப்பூர் செல்ல அனுமதிக்கக்கோரி அமித்ஷாவிடம் எதிர்கட்சிகள் கோரிக்கை


அனைத்துக்கட்சி குழுவினர் மணிப்பூர் செல்ல அனுமதிக்கக்கோரி அமித்ஷாவிடம் எதிர்கட்சிகள் கோரிக்கை
x

உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

டெல்லி,

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே 3-ம் தேதி முதல் வன்முறை நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்து வருகின்றனர். அதை அங்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் எதிர்க்கின்றன.

இதனால் அங்கு இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் பல மாவட்டங்களுக்கு பரவி வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை சுமார் 120 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வீடுகள், வணிக வளாகங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.

வன்முறையை தடுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மோதல் போக்கு தொடர்ந்து அதிரித்து வருகிறது.

இந்நிலையில், மணிப்பூர் வன்முறை தொடர்பாகவும், கல நிலவரம் தொடர்பாகவும் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், அனைத்துக்கட்சி குழுவினர் மணிப்பூர் செல்ல அனுமதிக்க வேண்டுமென அமித்ஷாவிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதேவேளை, மணிப்பூர் முதல்-மந்திரி பிரன் சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. அதேபோல், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் உள்துறை மந்திரியிடம் கோரிக்கை விடுத்தன.

அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் மணிப்பூர் செல்ல அனுமதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் உள்துறை மந்திரியிடம் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த கோரிக்கை தொடர்பாக இதுவரை எந்த முடிவும் உள்துறை தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story