ஒடிசா ரெயில் விபத்து: ப்ளீஸ் தண்ணீர் கொடுங்க ``நான் சாகலை.. - இறந்தவர்கள் மத்தியில் உயிருடன் எழுந்த நபர்! பதறிய ஊழியர்கள்...!


ஒடிசா ரெயில் விபத்து: ப்ளீஸ் தண்ணீர் கொடுங்க ``நான் சாகலை.. - இறந்தவர்கள் மத்தியில் உயிருடன் எழுந்த நபர்! பதறிய ஊழியர்கள்...!
x

3 ரெயில்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து கடந்த 2-ம் தேதி புறப்பட்ட ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து, எதிர் திசையில் வந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸும் இந்த விபத்தில் சிக்கியது. 3 ரெயில்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களில் 100-க்கும் அதிகமானோரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்களது உடலைத் தொடர்ந்து பாதுகாப்பதா அல்லது புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு தகனம் செய்வதா என்று தெரியாமல் ஒடிசா அரசு திணறிவருகிறது. இந்த விபத்து குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் விபத்து நடந்த பாலாசோர் பள்ளி ஒன்றில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. மயக்கநிலையில் இருப்பவர்களைக்கூட இறந்துவிட்டார்களா அல்லது உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியாமல் இறந்தவர்களாகக் கருதி பள்ளியில் போட்டு வைத்திருந்தனர். அவர்களில் ராபின் நையா (35) என்பவர் மயக்கநிலையில் இருந்தார். அவருக்கு திடீரென சுயநினைவு வந்தது. கண் விழித்துப் பார்த்தபோது அவரைச் சுற்றி இறந்தவர்கள் உடல் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ராபினால் எழுந்திருக்க முடியவில்லை. அந்த நேரத்தில் உடல்களை எடுக்க ஊழியர்கள் வந்தனர்.

அவர்களில் ஒருவரின் காலைத் தொட்ட ராபின், ``நான் இன்னும் சாகவில்லை. கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று கெஞ்சிக் கூறி கையால் சுரண்டினார். உடனே ஊழியர்கள் ராபினை சிகிச்சைக்காக வேறு அறைக்கு மாற்றினர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராபின் விபத்தில் கால் இரண்டையும் இழந்துவிட்டார். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பரகனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ராபினும், அவரின் ஊரைச் சேர்ந்த மேலும் ஆறு பேரும் ஆந்திராவில் வேலை தேடி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தபோது இந்த விபத்து நடந்திருக்கிறது.

ராபினுடன் வந்த ஆறு பேரைக் காணவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருக்கின்றன. ஆனாலும் அவர்களது உடல்களை அடையாளம் காண மேற்கு வங்கத்திலிருந்து உறவினர்களால் வரக்கூட முடியாத நிலையில் வறுமை நிலையில் இருக்கின்றனர். ராபினை கவனித்துக்கொள்ள அவரின் சகோதரர் வந்திருக்கிறார்.


Next Story