ஒடிசா ரெயில் விபத்து எதிரொலி - 18 ரெயில்கள் ரத்து, 7 ரெயில்கள் வழித்தடம் மாற்றம்


ஒடிசா ரெயில் விபத்து எதிரொலி - 18 ரெயில்கள் ரத்து, 7 ரெயில்கள் வழித்தடம் மாற்றம்
x

Image Courtesy : PTI

ரெயில் விபத்து எதிரொலியாக அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புவனேஸ்வர்,

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு ரெயில் வந்துகொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் ரெயில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரெயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது.

அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில், தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரெயிலும் விபத்துக்கு உள்ளானது. மேலும், சரக்கு ரெயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் விபத்து எதிரொலியாக அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 7 ரெயில்களின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஹவுரா-பூரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-பெங்களூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-சென்னை மெயில் உள்ளிட்ட 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் 7 ரெயில்கள் டாடா நகர் ரெயில் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.




Next Story