கேரளாவில் 'நிபா' வைரஸ்; சுகாதாரத்துறை மந்திரி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை


கேரளாவில் நிபா வைரஸ்; சுகாதாரத்துறை மந்திரி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை
x

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறை மந்திரி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவனந்தபுரம்,

கடந்த 2018-ம் ஆண்டு மே 19-ந்தேதி கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 1-ந்தேதி உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையின்படி கேரளாவில் 18 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், அதில் 17 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு முன்பாக இந்தியாவில் 2001 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் மேற்கு வங்காள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் பதிவு செய்யப்பட்டிருந்தது. நாட்டில் நிபா வைரஸ் பரவல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில சுகாதாரத்துறைகள் சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு நபருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நபரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தலைமையில், மலப்புரம் மாவட்டத்தில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிபா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுகதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.


Next Story