ஆயுதத்தால் தாக்கி தொழிலாளி கொலை


ஆயுதத்தால் தாக்கி தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:46 PM GMT)

பெங்களூருவில் ஆயுதத்தால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ராமமூர்த்தி நகர்:

பெங்களூருவில் ஆயுதத்தால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஆயுதத்தால் தாக்குதல்

பெங்களூரு ராமமூர்த்தி நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட விஜினாபுரா பகுதியில் வசித்து வந்தவர் இருதயராஜ்(வயது 22). இவர், பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இருதயராஜின் சித்தப்பா பெயர் விஜய். இவரும் கூலித் தொழிலாளி ஆவார். கடந்த 15-ந் தேதி 11 மணியளவில் விஜய்யும், இருதயராஜிம் வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்தனர். விஜினாபுரா மெயின் ரோட்டில் வைத்து இருதயராஜ், விஜயை 3 நபர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

அதாவது இருதயராஜ் வீட்டில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் வைத்து 3 பேரும் தடுத்து நிறுத்தி இருந்தனர். அப்போது 2 பேரும் எங்கே சென்று விட்டு வருகிறீர்கள், உங்களது வீடு எங்கே என்று 3 பேரும் கேட்டுள்ளனர். அதற்கு இருதயராஜ் சற்று தாமதமாக பதிலளித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் இருதயராஜையும், விஜயையும் தாக்கினார்கள்.

தொழிலாளி சாவு

இதில், இருதயராஜின் தலையில் பலத்த ரத்தகாயம் ஏற்பட்டு இருந்தது. விஜய் லேசான காயம் அடைந்திருந்தார். இதற்காக 2 பேரும் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறாமல் வீட்டில் சென்று படுத்துள்ளனர். இருதயராஜின் தலையில் ஏற்பட்ட காயத்திற்காக ஒரு மருந்து பொடியை மட்டும் விஜய் போட்டு விட்டுள்ளார். அதன்பிறகு, அவர் படுத்து தூங்கி விட்டார். நேற்று முன்தினம் காலையில் நீண்ட நேரமாகியும் இருதயராஜ் எழுந்திருக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த விஜய், இருதயராஜை அழைத்த போது, அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மேலும் இருதயராஜ் உயிர் இழந்திருப்பது விஜய்க்கு தெரியவந்தது. இதனால் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுபற்றி ராமமூர்த்திநகர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து இருதயராஜின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

3 பேருக்கு வலைவீச்சு

அப்போது கடந்த 15-ந் தேதி இரவில் 3 பேர் ஆயுதத்தால் தாக்கியதில் இருதயராஜ் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு இருந்ததும், இதற்காக சிகிச்சை பெறாததால் அவர் உயிர் இழந்ததும் தெரியவந்தது. மேலும் இருதயராஜை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ், அவரது கூட்டாளிகள் 2 பேர் என்பதும், சாலையில் தனியாக செல்லும் நபர்களை ராஜேஸ் மிரட்டுவது உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், அதுபோல், இருதயராஜை ஆயுதத்தால் தாக்கியதில் பலியானதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ராமமூர்த்திநகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஸ் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story