இன்ஸ்டாகிராமில் வாலிபருடன் பழகிய தேசிய பேஸ்பால் வீராங்கனையின் விபரீத முடிவு


இன்ஸ்டாகிராமில் வாலிபருடன் பழகிய தேசிய பேஸ்பால் வீராங்கனையின் விபரீத முடிவு
x
தினத்தந்தி 10 Jun 2023 7:27 AM GMT (Updated: 10 Jun 2023 7:58 AM GMT)

இன்ஸ்டாகிராமில் வாலிபருடன் சாட்டிங்கில் ஈடுபட்ட தேசிய அளவிலான பேஸ்பால் வீராங்கனையின் முடிவு பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

போபால்,

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் சஞ்சீவனி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கங்கா நகர் காலனியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம்பெண் சஞ்சனா பர்கடே (வயது 20).

தேசிய அளவிலான பேஸ்பால் வீராங்கனையான இவர், இன்ஸ்டாகிராமில் ராஜன் என்ற பெயர் கொண்ட நபருடன் ஒன்றரை ஆண்டாக சாட்டிங், புகைப்படங்கள் என பழகி வந்து உள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த இளைஞர், சஞ்சனாவை மிரட்ட தொடங்கி உள்ளார். இந்நிலையில், கடந்த 5-ந்தேதி சஞ்சனாவின் பெற்றோர் அருகேயுள்ள கிராமத்திற்கு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்று விட்டனர். அப்போது சஞ்சனா தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார்.

இதுபற்றி கூடுதல் எஸ்.பி. பிரியங்கா சுக்லா தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், ராஜன் ரேவா நகரில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் முஸ்லிம் வாலிபர் என்பதும், சாலையோர கடை நடத்தி வருபவர் என்பதும் தெரிய வந்தது. அந்நபர், இந்து என கூறி சஞ்சனாவிடம் பழகியதும் அவரது உண்மையான பெயர் அப்துல் மன்சூரி என்பதும் தெரிய வந்தது.

சஞ்சனாவை மதம் மாறும்படியும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டியதுடன், அவருடைய பெற்றோரையும் மிரட்டியுள்ளார். அதுவே உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்தினருக்கும் நல்லது என்றும் கூறியுள்ளார்.

இந்து என கூறி நட்பாக பழகிய அவர் முஸ்லிம் வாலிபர் என எங்களுக்கு தெரிந்ததும், சஞ்சனா அவருடன் பேசாமல் தவிர்க்க தொடங்கினார் என சஞ்சனாவின் தாயார் கூறியுள்ளார்.

இதனால், மன்சூரி தொடர்ந்து தொல்லை கொடுத்து உள்ளார். ஆனால், அவப்பெயர் ஏற்படும் என பயந்து போலீசில் புகார் அளிக்கவில்லை என சஞ்சனாவின் தந்தை ஹர்னாம் சிங் கூறியுள்ளார்.

அந்தரங்க வீடியோ ஒன்றை மன்சூரி சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார். இதனால், அவரிடம் பேசாமல் தவிர்த்து உள்ளார். அவரிடம் பல முறை வீடியோவை நீக்கும்படி கோரியும் அவர் மறுத்து உள்ளார் என கூறப்படுகிறது. இதனால், வீராங்கனை சஞ்சனா தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து, இளைஞர் அப்துல் மன்சூரி கைது செய்யப்பட்டார். அவரிடம் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.


Next Story