கனமழையால் நிலச்சரிவு: சிக்கிம் - மே.வங்கம் இடையே சாலை போக்குவரத்து துண்டிப்பு!


கனமழையால் நிலச்சரிவு: சிக்கிம் - மே.வங்கம் இடையே சாலை போக்குவரத்து துண்டிப்பு!
x

சிக்கிம்-மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

கனமழை பெய்து வருவதால் சிக்கிம்-மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழை காரணமாக சிக்கிம் மாநிலத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சிக்கிமில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சிங்டாமில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவினால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுவரை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர். திங்கட்கிழமை காலைக்குள் நிலச்சரிவு அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலச்சரிவு காரணமாக காங்டாக் மற்றும் மேற்கு வங்கம் இடையே சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 10ல் இரண்டு இடங்களில் பெரிய பாறைகள் விழுந்து உள்ளன. இவற்றை அகற்ற ஒரு நாள் முழுவதும் ஆகலாம். ஆகவே சிலிகுரிக்கு செல்பவர்கள் மேற்கு வங்க எல்லைக்கு செல்ல பாக்யோங் வழியாக செல்லும் சாலைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடக்கு வங்காளம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Next Story