குடகு மாவட்டத்தில் கனமழை: கர்நாடகாவில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


குடகு மாவட்டத்தில் கனமழை: கர்நாடகாவில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்மட்டம் சுமார் 20 ஆயிரம் கன அடியை நெருங்கியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை இம்மாத துவக்கத்தில் தொடங்கியது. 3 வாரங்கள் கடந்து தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான உடுப்பி, குடகு, சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டப் பகுதிகள் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக உள்ளன.

இப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் தான் காவிரி நதிக்கு வரும் நீராகும். இந்நிலையில் கனமழை எதிரொலியாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. குடகு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையில் நேற்று 2241 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 3856 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதேபோல் தமிழகத்துக்கு நேரடியாக தண்ணீர் திறக்கப்படும் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கேரள மாநிலம், வயநாடு மற்றும் கர்நாடகா மாநில எல்லைப் பகுதிகளிலிருந்து பெய்யும் மழைநீரானது கபினி அணைக்கு வருகிறது. இப்பகுதிகளிலும் பலத்த மழை காரணமாக கபினி அணைக்கு நேற்று 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, ஒரே நாளில் 16,927 கன அடியாக அதிகரித்துள்ளது.

கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்மட்டம் சுமார் 20 ஆயிரம் கன அடியை நெருங்கியுள்ளது. அடுத்து வரும் 7 நாள்களுக்கு இப்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story