இந்தியா ஒற்றுமை பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி யார் என்பது நிரூபணமாகி உள்ளது; சித்தராமையா கருத்து


இந்தியா ஒற்றுமை பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி யார் என்பது நிரூபணமாகி உள்ளது; சித்தராமையா கருத்து
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா ஒற்றுமை பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி யார் என்பது நிரூபணமாகி உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் வரலாற்று சிறப்பு மிக்க இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கர்நாடகத்தில் இன்றுடன் (அதாவது நேற்று) நிறைவு பெற்றுள்ளது. சாதி, மதம், கட்சி பேதம் இன்றி கர்நாடகத்தில் நடைபெற்ற பாதயாத்திரையில் கலந்துகொண்டு, இந்த பாதயாத்திரையை வெற்றி பெற வைத்த மக்களுக்கு என்னுடைய இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

கர்நாடகத்தில் நடைபெற்ற ராகுல்காந்தி பாதயாத்திரையில் சிறுவர்கள், சிறுமிகள், மாணவர்கள், மாணவிகள், விவசாயிகள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், வயதானவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று ஆதரவு அளித்திருந்தார்கள். இதன்முலம் ராகுல்காந்தியின் இந்த வரலாற்று பாதயாத்திரை புதிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நிரூபணமாகி உள்ளது

ராகுல்காந்தியின் பாதயாத்திரை பற்றி பல்வேறு பொய் மூட்டைகளை பா.ஜனதாவினர் அவிழ்த்து விட்டனர். பாதயாத்திரை பற்றி பா.ஜனதாவினர் தங்களது வாய்க்கு வந்ததை கூறி வந்தனர். தற்போது கர்நாடகத்தில் இந்த பாதயாத்திரை வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ராகுல்காந்தி யார் என்பது நிரூபணமாகி உள்ளது.

இந்த பாதயாத்திரையின் மூலம் கர்நாடகத்தில் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.


Next Story