அசாமில் மதரசா கண்காணிப்பு பணியை இஸ்லாமிய சமூக தலைவர்கள் மேற்கொள்வார்கள்: டி.ஜி.பி. தகவல்


அசாமில் மதரசா கண்காணிப்பு பணியை இஸ்லாமிய சமூக தலைவர்கள் மேற்கொள்வார்கள்:  டி.ஜி.பி. தகவல்
x

அசாமில் மதரசாக்களை கண்காணிக்கும் பணியை இஸ்லாமிய சமூக தலைவர்கள் மேற்கொள்வார்கள் என டி.ஜி.பி. கூறியுள்ளார்.


கவுகாத்தி,


அசாம் மாநிலத்திற்கு சுற்றுலா விசாவில் கூச் பெஹார் வழியே இந்தியாவிற்குள் வந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த சிலர் அதன் பின்னர், மதம் சார்ந்த பல பகுதிகளுக்கு பயணித்து உள்ளனர். இதில் டெல்லி, அஜ்மீர் ஷெரீப் உள்ளிட்ட பல பகுதிகளில் மத கூட்டங்களை நடத்தியுள்ளனர். தவிர, ரகசிய மதபோதனையிலும் கூட அவர்கள் ஈடுபட்டு உள்ளனர் என தகவல் வெளியானது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 13-ந்தேதி பிஸ்வநாத் மாவட்டத்தின் பெஹாலி பகுதியில் அவர்கள் அனைவரும் முகாமிட்டு உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஜிங்கியா பகுதி காவல் துறையினர் வங்காளதேச நாட்டை சேர்ந்த அந்த 17 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வெளிநாட்டு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், அசாம் டி.ஜி.பி. பாஸ்கர் ஜோதி மகந்தா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, அசாமில் உள்ள மதரசாக்களை கண்காணிக்கும் பணியை இஸ்லாமிய சமூகத்தின் தலைவர்கள் மேற்கொள்வார்கள் என கூறியுள்ளார்.

நிறைய மதரசாக்கள் முறையாக செயல்படவில்லை என அவர்கள் ஒப்பு கொண்டுள்ளனர். மதரசாக்கள் பற்றிய அனைத்து விவரங்களும் அரசு வலைதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் டி.ஜி.பி. கூறியுள்ளார்.

இந்திய விசா விதிகளை மீறிய விவகாரத்தில் வங்காளதேச நாட்டை சேர்ந்த 17 பேரை கைது செய்து இருக்கிறோம். அவர்கள் பிஸ்வநாத் மாவட்டத்தின் பாக்மரி பகுதியில் வசித்து வந்துள்ளனர். சுற்றுலா விசாவிலேயே இந்தியாவுக்கு வந்த அவர்கள், அனுமதி இல்லாத மதபோதனை செயல்களில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிய வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story