தீவிரமடையும் மின்வாரிய ஊழியர்களின் போராட்டம்: முதல்-அமைச்சர் ரங்கசாமி உடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை


தீவிரமடையும் மின்வாரிய ஊழியர்களின் போராட்டம்: முதல்-அமைச்சர் ரங்கசாமி உடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை
x

புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி உடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

புதுச்சேரி,

புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவிற்கு காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அரசு சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அரசின் இந்த முடிவை எதிர்த்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு அனைத்து ஊழியர் போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கி ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இருந்தபோதிலும் தனியார்மய முடிவில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருந்தால் கடந்த பிப்ரவரி மாதம் மின்வாரிய ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அப்போது அவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தது.

இந்தநிலையில் மின்சார வினியோகத்தை 100 சதவீதம் தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் அறிவிப்பினை புதுச்சேரி அரசு அதிரடியாக வெளியிட்டது. இது மின்வாரிய ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 28-ம் தேதி பணிகளை புறக்கணித்து மின்வாரி ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். வேலை நிறுத்த போராட்டத்தால் மின்அளவீடு செய்வது, மின்கட்டணம் வசூல், புதிய இணைப்புகள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று மின்வாரிய ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிர அடைந்து வருவதால் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக பாதுகாப்பு பணயில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் வில்லியனூரில் செய்தியாளர்களை சந்தித்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியில் மின்துறை தனியார் மையம் என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், அதை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம் நடத்துவது சரில்ல என்றும் தெரிவித்தார்.

தற்போது மின்வாரி ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்து உள்ள நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி உடன் துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.


Next Story