கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இந்தியாவில் நாளை அறிமுகம்


கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இந்தியாவில் நாளை அறிமுகம்
x

பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

புதுடெல்லி,

பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும் போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். பிற புற்றுநோய்களை பொறுத்தமட்டில், நோயால் பாதிக்கப்பட்ட பின்பே இதற்கான மருந்துகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கர்ப்பப்பை வாய் புற்றுநோயைப் பொறுத்தவரை, இந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இந்த நாள் வரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து தடுப்பூசிக்கான சோதனைகள் செப்டம்பர் 2018-ம் ஆண்டில் இந்தியாவின் 12 இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில், ஜூன் 8-ம் தேதியன்று தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் செய்யப்படுவது பெருமைக்குரியது என்று டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்திருக்கிறார். மத்திய உயிரி தொழில்நுட்ப துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்கிறது.


Next Story