இந்திய தூதரக அதிகாரிகளை குறிவைத்து கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் - சம்மன் அனுப்பிய இந்தியா


இந்திய தூதரக அதிகாரிகளை குறிவைத்து கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் - சம்மன் அனுப்பிய இந்தியா
x

கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளை குறிவைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி,

இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இந்து மத போதகரை கொலை செய்ய திட்டமிட்டதாக காலிஸ்தான் புலி படை என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 40 பேரை மத்திய புலனாய்வு அமைப்பு கடந்த ஆண்டு பயங்கரவாதிகளாக அறிவித்தது. இந்த அமைப்பின் தலைவனாக ஹர்தீப் சிங் செயல்பட்டு வந்தான்.

ஹர்தீப் சிங் நிஜர் கனடா நாட்டில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்தான், ஹர்தீப்பை கைது செய்ய இந்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.

இதனிடையே, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டான். கனடாவின் சுரே பகுதியில் ஹர்தீப் கடந்த மாதம் 19-ம் தேதி மர்மநபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து கனடாவின் டொரொண்டோ மாகாணத்தில் இந்திய தூதரகம் நோக்கி காலிஸ்தான் ஆதரவாளர்கள் வரும் 8ம் தேதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக டொரோண்டோ மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டரில் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. டொரொண்டோவில் ஹர்தீப் சிங் நிஜரை கொன்ற முகங்கள் என்று எழுதப்பட்டு அதன் கீழ் இந்திய தூதரக அதிகாரிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜர் கொல்லப்பட்டதை கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரில் இந்திய தூதர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றது தொடர்பாக விளக்கம் கேட்டு டெல்லியில் உள்ள கனடா தூதரகத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் கனடா உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்தியா - கனடா இடையேயான உறவு பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Next Story