உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று - ஜனாதிபதி திரவுபதி முர்மு


உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று - ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.


புதுடெல்லி,

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு, கடந்த ஜூலை 25-ந்தேதி, இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக பதயேற்றார். அதன் பிறகு முதல் முறையாக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று அவர் உரையாற்றினார்.

தனது உரையின் போது கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரங்களில் உயிரிழந்த மக்களை அவர் நினைவுகூர்ந்தார். மேலும் அவர் கூறியதாவது;-

"இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் என சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சுதந்திர தேசமாக இந்தியா தனது 75-வது ஆண்டை நிறைவு செய்கிறது.

உலகின் பல்வேறு ஜனநாயக நாடுகளில் பெண்கள் வாக்குரிமையை பெறுவதற்கு நீண்ட போராட்டங்களை பெற வேண்டியிருந்தது. ஆனால் ஜனநாயகத்தின் உண்மையான ஆற்றலை உலகிற்கு உணர்த்திய பெருமை இந்தியாவிற்கு உண்டு. தொடக்கம் முதலே நமது குடியரசு பொதுவான பாலின நடைமுறையை கடைபிடித்து வருகிறது. நமது தேசத்தின் மிகப்பெரிய நம்பிக்கையாக பெண்கள் திகழ்கிறார்கள்.

உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தனித்துவமாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தை நாம் துவக்கினோம். தற்சார்பு இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவை நிறைவேற்ற நாம் உறுதி பூண்டுள்ளோம்.

இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மாபெரும் வீரர்கள் குறிப்பாக பழங்குடியினர், விவசாயிகள் உள்ளிட்டவர்களின் வரலாறுகள் சொல்லப்படாமால் இருக்கின்றன. நமது இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15-ந்தேதி 'ஜனஜாதிய கவுரவ் திவாஸ்' தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.

இதன் மூலம் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வீரர்களின் உள்ளூர் சின்னங்களாக மட்டும் இல்லாமல் தேசத்தின் உந்துசக்தியாக மாறுவார்கள். இந்தியாவில் வேற்றுமைகளுக்குள் ஒற்றுமையை கொண்ட நாடு. இந்த ஒற்றுமை தான் ஒரு சிறந்த தேசத்தை உருவாக்க நம்மை ஒன்றிணைந்து செயல்பட வைக்கிறது.

நாளை வரப்போகும் சுதந்திர தினம், காலனிய ஆதிக்கத்தின் பிடியில் இருந்து நாம் விடுதலை அடைந்து, நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்க முடிவு செய்த நாளாகும். இன்று நாம் சுதந்திர இந்தியாவில் வாழ்வதற்காக ஒப்பற்ற தியாகங்களைச் செய்தவர்கள் அனைவருக்கும் தலைவணங்கி, வரவிருக்கும் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story