உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்- ராஜ்நாத் சிங்


உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்- ராஜ்நாத் சிங்
x

சனாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

ஜெய்ப்பூர்,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமத்துவம், சமூகநீதிக்கு எதிரான சனாதனம், கொரோனா, மலேரியா, டெங்கு போல ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.அவரின் இந்த கருத்துக்கு பா.ஜனதா, இந்து அமைப்பு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீரில் பா.ஜனதாவின் பரிவர்தன் யாத்திரையின் 3-வது கட்ட தொடக்கத்தையொட்டி நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.

அப்போது அவர், 'சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, அசோக் கெலாட் ஆகியோர் ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்? சனாதன தர்மம் குறித்து அவர்களின் கருத்து என்ன?சனாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு அவர்களை மன்னிக்காது.'இவ்வாறு அவர் பேசினார்.

பஞ்சாப் மாநிலம் ஹர்பன்ஸ்பூர் கிராமத்தில் நேற்று நடந்த 'மேரி மாதி, மேரா தேஷ்' நிகழ்வில் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பங்கேற்று பேசினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'சனாதன தர்மம் என்றும் நிலைத்திருக்கும். இந்துக்களை ஒழிக்க நினைத்தவர்கள்தான் ஒழிந்துவிட்டார்கள். 'இந்தியா' கூட்டணி தலைவர்கள், நாட்டிடமும், இந்து சமூகத்தினரிடமும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார்.

டெல்லியில் பா.ஜனதா தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், 'இந்து மதத்தை அவமதிப்பதையும், நாட்டில் பிளவை ஏற்படுத்துவதையும் காங்கிரஸ் தனது கொள்கையாகவே வைத்திருக்கிறது' என்றார்.மத்திய மந்திரிகள் அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் படேல், முன்னாள் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஆகியோரும் உதயநிதி ஸ்டாலின் கருத்து தொடர்பாக 'இந்தியா' கூட்டணிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Next Story