முந்தைய பா.ஜனதா ஆட்சியில் காண்டிராக்டர்களிடம் பணம் வசூல் செய்ததற்கான ஆவணங்களை வெளியிடுவேன்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


முந்தைய பா.ஜனதா ஆட்சியில் காண்டிராக்டர்களிடம் பணம் வசூல் செய்ததற்கான ஆவணங்களை வெளியிடுவேன்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:46 PM GMT)

முந்தைய பா.ஜனதா ஆட்சியில் காண்டிராக்டர்களிடம் பணம் வசூல் செய்ததற்கான ஆவணங்களை வெளியிடுவேன் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முந்தைய பா.ஜனதா ஆட்சியில் காண்டிராக்டர்களிடம் எந்த ரீதியில் பணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்த ஆவணங்கள் என்னிடம் உள்ளன. சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு பிறகு அந்த ஆவணங்களை நான் வெளியிடுவேன். கடந்த 2 நாட்களுக்கு முன்பே இதுகுறித்து நான் பேச வேண்டி இருந்தது. ஆனால் பெங்களூரு மாநகராட்சியில் தீவிபத்து ஏற்பட்டதால் அதுபற்றி பேச வேண்டாம் என்று நான் அமைதியாகிவிட்டேன்.

இன்று (நேற்று) காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. அதனால் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு பிறகு பேசுகிறேன். பணம் வசூல் குறித்து அதிர்ச்சி அளிக்கும் வகையிலான ஆவணங்களை வெளியிடுவேன். என்னை அஸ்வத் நாராயண் கடுமையாக விமர்சிக்கிறார். திருடர்களை பாதுகாப்பதில் அஸ்வத் நாராயணுக்கு டாக்டர் பட்டம் வழங்கலாம்.

ராமநகர் பொறுப்பு மந்திரியாக பணியாற்றிய அவர் அங்கு குப்பைகளை அள்ளுகிறேன் என்றார். கடைசியில் அவரது கட்சியை மட்டும் சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ளார். அவர் அந்த மனநிலையிலேயே உள்ளார். அவர் மந்திரியாக இருந்தபோது அவரது துறையில் என்ன நடந்தது என்பதை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. நேரம் வரும்போது அதுபற்றி பேசுகிறேன்.

அஸ்வத் நாராயண், காண்டிராக்டர்களை தூண்டிவிடுகிறார். இது எங்களுக்கு தெரியும். நேர்மையான முறையில் பணியாற்றிய காண்டிராக்டர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும். நாங்கள் ஒப்பந்த பணிகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். காண்டிராக்டர்களுக்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக பேச வைத்துள்ளனர். நான் இதுவரை எந்த பணிகளையும் ஒப்பந்தத்திற்கு கொடுக்கவில்லை. சி.டி.ரவிக்கும் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் சிகிச்சை தேவைப்படுகிறது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story