லடாக்கில் வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்


லடாக்கில் வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
x

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

புதுடெல்லி,

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது;-

லடாக்கில் பேருந்து விபத்துக்கு உள்ளானதில் நமது துணிச்சல் மிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான ராணுவ வாகனம்;

ராணுவ வீரர்கள் 26 பேரை ஏற்றிச் சென்ற வாகனம், லடாக் அருகே சாலையில் இருந்து தடுமாறி ஷீயோக் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்த விபத்து குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, "பர்தாபூர் முகாமிருந்து 26 வீரர்களை ஏற்றிக் கொண்டு ராணுவ வாகனம் ஒ ஹனிஃப் பகுதிக்குச் சென்றது. சுமார் 9 மணிக்கு தோஷி பகுதியில் இருந்து 25 கி.மீ., தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்து தடுமாறி ஷீயோக் நதியில் 50 அடி ஆழத்தில் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் இருந்த அனைவரும் காயமடைந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் விரைவாக முடுக்கிவிடப்பட்டு, காயமைடந்த வீரர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பர்தாபூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story