"டாக்டர், எனக்கு புற்றுநோய்... நான் 6 மாசம்தான் இருப்பேன்... அப்பா, அம்மாகிட்ட சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்!" - 6 வயது சிறுவனின் நெஞ்சை நொறுக்கும் உண்மைக்கதை


டாக்டர், எனக்கு புற்றுநோய்... நான் 6 மாசம்தான் இருப்பேன்... அப்பா, அம்மாகிட்ட சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்! - 6 வயது சிறுவனின் நெஞ்சை நொறுக்கும் உண்மைக்கதை
x
தினத்தந்தி 8 Jan 2023 3:16 AM GMT (Updated: 8 Jan 2023 5:20 AM GMT)

பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான பயணம் தான் வாழ்க்கை... இந்த வாழ்க்கை பயணத்தில்தான் எத்தனை போராட்டங்கள்... சோதனைகள்...சோகங்கள்...

பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான பயணம்தான் வாழ்க்கை... இந்த வாழ்க்கை பயணத்தில்தான் எத்தனை போராட்டங்கள்... சோதனைகள்...சோகங்கள்...

இந்த உண்மைக்கதையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

அது ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரி... நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் சுதிர் குமார், புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளைப் பார்ப்பதில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தார். ஒரு இளம் தம்பதியர் அவரிடம் வந்தனர்.

" டாக்டர்... வெளியே எங்கள் 6 வயது மகன் மனுவை உட்கார வச்சிட்டு வந்திருக்கோம். அவனுக்கு புற்றுநோய்... இதை நாங்க அவனுக்கு சொல்லலை... அவனைப் பாருங்க.. அவனுக்கு என்ன சிகிச்சை செய்யலாம் என சொல்லுங்க... தயவு செஞ்சி அவனிடம் அவனுக்கு வந்திருப்பது புற்றுநோய் என்பதை மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்".

அதிர்ந்து போனார் டாக்டர். ஆனாலும் அதை ஏற்கும் விதமாய் தலையாட்டினார்.

அடுத்த அதிர்ச்சி, அவருக்கு காத்திருந்தது. சக்கர நாற்காலியில் அந்த 6 வயது பிஞ்சு மகன் அழைத்து வரப்பட்டிருந்தான். அவன் அழகு முகத்தில் புன்னகை... நம்பிக்கைக்கீற்றுகளும் ஒரு சேர பளிச்சிட்டன...

மனுவுக்கு வந்திருப்பது 'கிளியோபிளாஸ்டமோ மல்டிபார்ம்- கிரேடு 4'. இந்த புற்றுநோய் அவனது மூளையின் இடது பக்கத்தை தாக்கி இருக்கிறது. இதனால் அவனது வலது கை, கால்கள் முடங்கிப்போய் இருந்தன... வாழ்க்கை பயணத்தில் அவன் சேருமிடம் நெருங்கி விட்டது, துயரம்தான்.

அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவனை டாக்டர் சுதிர்குமார் பரிசோதித்து பார்த்து விட்டு, அவனுக்கான சிகிச்சை விவரங்களைப் பெற்றோரிடம் தெரிவித்து விட்டு அவர்கள் வெளியேறும் தருணம் வந்தது. அதற்காகத்தான் காத்திருந்ததுபோல சிறுவன் மனு அவனது அப்பா, அம்மாவிடம், "அப்பா அம்மா... நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியே போய் காத்திருங்க... நான் கொஞ்சம் டாக்டர்கிட்ட தனியா பேசிட்டு வந்திடுறேன்" என பெரிய மனுசன் போல பேசினான். அவர்களும் மகனது வேண்டுகோளை ஏற்று வெளியேறினார்கள்.

" டாக்டர்... எனக்கு வந்திருக்கிற நோய் பற்றி நான் ஐபேட்ல முழுசா படிச்சிட்டேன்... அதைப்பற்றி நான் தெரிஞ்சிக்கிட்டேன்... இன்னும் 6 மாசம்தான் நான் இருப்பேன்... ஆனால் நான் இதைப்பற்றி என் அப்பா, அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லலை... அவங்களால இதைத் தாங்கிக்க முடியாது டாக்டர்... அவங்களுக்கு என் மீது அலாதி பிரியம்... தயவு செஞ்சி அவங்ககிட்ட இதைப்பற்றி சொல்லிடாதீங்க டாக்டர்....".

தூக்கி வாரிப்போட்டது டாக்டருக்கு.

ஒரு பக்கம் என் பையனுக்கு புற்றுநோய் என்பதை அவனிடம் சொல்லி விடாதீர்கள் என்று சொல்கிற பெற்றோர்.

இன்னொரு பக்கம் எனக்கு புற்றுநோய்னு தெரிஞ்சிக்கிட்டேன்... என் அப்பா, அம்மாகிட்ட சொல்லிடாதீங்க என்று கதறுகிற சிறுவன்...

ஆனாலும் டாக்டர் அவனிடம், "கண்டிப்பா சொல்ல மாட்டேன்பா" என வாக்களித்தார். வேறு வழி?

மனுவை டாக்டர் வெளியே அனுப்பி வைத்து விட்டு, அவனது பெற்றோரை மீண்டும் உள்ளே அழைத்து பேசினார். மனுவிடம் அளித்த வாக்குறுதியை டாக்டர் சுதிர்குமார் மீற வேண்டியதாயிற்று. அது தர்மமா, அதர்மமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். மனு தன்னிடம் பேசியதை அப்படியே அவனது பெற்றோரிடம் டாக்டர் சுதிர்குமார் சொன்னார்.

"என்னால் மனுவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியலைதான்... ஆனால் இந்த உணர்வுப்பூர்வமான விஷயத்தை கையாளுகிறபோது அந்த பையனையும், அவனது பெற்றோரையும் ஒரே பக்கத்தில் வைக்க வேண்டியதும் முக்கிமா போயிடுச்சு..." இது டாக்டர் தரப்பு நியாயம்.

மாதங்கள் உருண்டோடின. மனுவின் பெற்றோர் டாக்டர் சுதிர்குமாரை மீண்டும் தேடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் டாக்டர் கேட்ட கேள்வி, "மனு எப்படி இருக்கான்?".

"டாக்டர்... இத்தனை நாட்களையும் நாங்க அவனோடுதான் அவன் ஆசைப்பட்டபடி சந்தோஷமாக கழிச்சோம்.. அவன் டிஸ்னிலேண்ட் போகணும்னு ஆசைப்பட்டான். அங்கேயும் அழைச்சிட்டுப்போனோம்... அவன் போன மாசம் இறந்துட்டான் டாக்டர்... அவனோடு சிறப்பா நாங்க அவன் விருப்பப்பட்டபடியெல்லாம் கழிக்க ஒரு 8 மாத காலத்தை நீங்க தந்ததுக்காக நன்றி சொல்லத்தான் வந்தோம் டாக்டர்...". ஆனாலும் அவர்களின் கண்கள் குளமாயின.

- இந்த நிகழ்வுகளை டாக்டர் சுதிர்குமார் கடந்த 5-ந் தேதி டுவிட்டரில் பதிவிட அது இப்போது வைரலாகி இருக்கிறது.

இங்கே டாக்டர் சுதிர்குமார் அந்த சிறுவனிடம் அளித்த வாக்குறுதியை மீறியது என்னமோ உண்மைதான். ஆனால் மனு தனது மீதியான நாட்களை ஆனந்தமாக கழிக்க பெற்றோர் உதவியதில் டாக்டரின் பங்கு மகத்தானது. இதில் பளிச்சிட்டது, மானுடம்!


Next Story