கேரளாவில் கனமழைக்கு 12 பேர் பலி;10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்


கேரளாவில் கனமழைக்கு 12 பேர் பலி;10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
x
தினத்தந்தி 3 Aug 2022 1:04 AM GMT (Updated: 3 Aug 2022 1:06 AM GMT)

கேரளாவில் கடந்த 2 நாட்களில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்கிறது. இதனால், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுபோல் நாளை எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 204.5 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த 2 நாட்களில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். இதில் நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பம்பை, நெய்யார், மணிமலா, மணிமலா (கல்லுப்பாறை), கரமனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பலத்த மழையை தொடர்ந்து கேரளாவில் 49 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. இவற்றில் 757 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு உள்ளனர். கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி கோட்டயம், ஆலப்புழை, பத்தனம்திட்டை ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை விடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நேற்று முன்தினம் இரவு முதல் திருச்சூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை பிள்ளை பரம்பு என்ற இடத்தில் ஆண் காட்டு யானை ஒன்று நின்றிருந்தது. சாலக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த யானை அடித்து செல்லப்பட்டது. இதனால் யானை வெள்ளத்தில் தத்தளித்தது. பின்னர் யானை வெள்ளத்தில் இருந்து தப்பிப்பதற்காக கரையேற பலமுறை முயன்றது. இருப்பினும் முயற்சி பலன் அளிக்கவில்லை.

இதனால் யானை தத்தளித்துக் கொண்டு உயிருக்கு போராடியது. அதை காப்பாற்ற வனத்துறையினர் போராடினர். பின்னர் மாலை 3 மணியளவில் காட்டு யானை தானாகவே கரையேறி வனப்பகுதிக்குள் சென்றது. 7 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் யானை வெள்ளத்தில் இருந்து வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story