'இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது' - பிரதமர் மோடி


இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது - பிரதமர் மோடி
x

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், 'ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்' என்ற பெயரில் இஸ்ரேல் மீது இன்று திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் படைகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதையடுத்து 'ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்' என்ற பெயரில் காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதன் காரணமாக மேற்குகரையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்வோம். கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு உறுதுணையாக நிற்போம்." இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story