ராட்சத விளம்பர பலகை விழுந்த விவகாரம்: தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது


ராட்சத விளம்பர பலகை விழுந்த விவகாரம்: தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது
x

மும்பையில் கடந்த 13ம் தேதி ராட்சத விளம்பர பலகை விழுந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்ப்பூர்,

மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 13ம் தேதி மாலை திடீரென வீசிய புழுதிப் புயலில் காட்கோபார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 120 அடி உயர பிரம்மாண்ட விளம்பரப் பலகை அடியோடு சரிந்து அருகில் இருந்த பெட்ரோல் பங்கின் மேற்கூரை மீது விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மராட்டிய மாநில அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்திருந்தது. இதனிடையே, உரிய அனுமதியின்றி ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் விளம்பர பதாகை வைத்த நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவான அந்த நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பாவேஷ் பிண்டேவை மும்பை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த பாவேஷ் பிண்டேவை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து நேற்று மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, பிண்டேவை போலீசார் இன்று காலை மும்பைக்கு அழைத்து வந்தனர். இவர் மீது ஏற்கனவே ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு உள்பட 20 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story