முதியவர்களுக்கு பணம் எடுத்து கொடுக்க உதவுவதுபோல் நடித்து மோசடி


முதியவர்களுக்கு பணம் எடுத்து கொடுக்க உதவுவதுபோல் நடித்து மோசடி
x
தினத்தந்தி 11 Sep 2023 6:45 PM GMT (Updated: 11 Sep 2023 6:46 PM GMT)

ஏ.டி.எம். மையங்களில் முதியவர்களுக்கு பணம் எடுத்து கொடுக்க உதவுவதுபோல் நடித்து மோசடியில் ஈடுபட்ட தனியார் பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கோலார் தங்கவயல்

மோசடி

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுனில் 10-க்கும் மேற்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் அவற்றுக்கான ஏ.டி.எம். மையங்களும் அமைந்துள்ளன.

இந்த ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி ஒருவர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக சிந்தாமணி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.

அதுமட்டுமின்றி போலீசார் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டு அந்த மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் சிந்தாமணி டவுனில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் முன்பு ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

கையும், களவுமாக பிடிபட்டார்

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கண்காணித்து வந்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் சிந்தாமணி டவுன் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற 65 வயது முதியவர் வந்தார். அவரிடம் அந்த நபர் பேச்சு கொடுத்தார். மேலும் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறினார்.

அதை நம்பிய வெங்கடேஷ் ஏ.டி.எம். கார்டை அந்த நபரிடம் கொடுத்தார். அப்போது அந்த நபர் முதியவர் வெங்கடேசை ஏமாற்றி ரூ.10 ஆயிரத்தை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

பின்னர் உங்களது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி முதியவரிடம் ஏ.டி.எம். கார்டை திருப்பி கொடுத்தார். மேலும் உடனடியாக அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்றார். உடனே போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.

கைது

விசாரணையில் அவர் பட்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த குருமூர்த்தி என்பது தெரியவந்தது. தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்த குருமூர்த்தி, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், இதுவரை அவர் 100-க்கும் மேற்பட்ட முதியவர்களிடம் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து போலீசார் குருமூர்த்தியிடம் இருந்து ரூ.4 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story