21 ஆண்டுகளாக மதம் மாற வற்புறுத்தி தினமும் அடி, உதை; கணவர் மீது மனைவி போலீசில் புகார்


21 ஆண்டுகளாக மதம் மாற வற்புறுத்தி தினமும் அடி, உதை; கணவர் மீது மனைவி போலீசில் புகார்
x
தினத்தந்தி 6 Dec 2022 2:58 PM GMT (Updated: 6 Dec 2022 3:04 PM GMT)

21 ஆண்டுகளாக மதம் மாற வற்புறுத்தி தினமும் அடித்து, உதைத்த தனது கணவர் மீது மனைவி போலீசில் புகாரளித்து உள்ளார்.

புனே,


மராட்டியத்தின் புனே நகரில் எரவாடா காவல் நிலையத்தில் 43 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்து உள்ளார். அதில், எரவாடா பகுதியில் வசித்து வந்த ரவீந்தர் சிங் பன்வார் சிங் ராஜ்புரோகித் என்பவர் 21 ஆண்டுகளுக்கு முன்பு, தனது மதத்தில் இருந்து விலகி, கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அவர் தனது மனைவியையும், அவரது பெற்றோரையும் மற்றும் குழந்தைகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்காக உடல் மற்றும் மனரீதியோக அவர் தனது மனைவியை அடித்து, துன்புறுத்தி வந்துள்ளார்.

குழந்தைகளை கிறிஸ்தவ பள்ளி கூடத்தில் சென்று சேர்த்து விடுவேன் என மிரட்டியும் வந்துள்ளார். தங்களது குழந்தைகள் இரண்டு பேரும் புனே நகரில் உள்ள சிறந்த பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். ஆனால், வீட்டில் கணவர் ஏற்படுத்தும் மனஅழுத்தம் சார்ந்த சூழலால், அவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது.

கணவர், தன்னுடைய மத உணர்வுகளை புண்படுத்தி உள்ளார். இந்து தெய்வங்களின் சிலைகளை ஆற்றில் தூக்கி போட்டு விட்டார். வீட்டில் நிறுவப்பட்டு இருந்த மதம் சார்ந்த புகைப்படங்களையும் அவர் நீக்கி விட்டார் என புகாரில் தெரிவித்து உள்ளார்.

கணவரின் இந்த தொடர் செயலால், மனம் வெறுத்து போன அவரது மனைவி போலீசில் புகாரளித்து உள்ளார். இதனை தொடர்ந்து அவரது கணவர் மீது தொடர்புடைய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் மோசடியான மற்றும் ஒருவரை நம்ப செய்து ஏமாற்றும் வகையிலான கட்டாய மதமாற்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன என்ற பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மீது வருகிற டிசம்பர் 12-ந்தேதி விசாரணை நடத்த முடிவாகி உள்ளது.

இது மிக ஆபத்து ஏற்படுத்தும் விசயம் என இதுபற்றி குறிப்பிட்ட நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு தொடர்ந்து கூறும்போது, நாட்டில் ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரம் உள்ளது. அப்படியிருக்கும்போது, இந்த கட்டாய மதமாற்றம் என்பது என்ன? என கேள்வி எழுப்பியிருந்தது.


Next Story