இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு; 6 பேர் உயிரிழப்பு


இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு; 6 பேர் உயிரிழப்பு
x

இமாசல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியான நிலையில், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

காங்ரா,



நாட்டில் பருவமழையை முன்னிட்டு, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கிழக்கு ராஜஸ்தான் மற்றும் தெற்கு அரியானாவில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய கூடும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தொடர் கனமழையால், சுற்றுலாவாசிகள் உள்பட உள்ளூர்வாசிகளும் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த ரெயில்வே பாலம் ஒன்று உடைந்து விழுந்து உள்ளது. வெள்ளம் வடியாமல், தொடர்ந்து ஓடி கொண்டிருக்கிறது. வருகிற 25-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், மாநில பேரிடர் பொறுப்பு படையின் எஸ்.பி. குமாரி இல்மா அப்ரோஜ் இன்று கூறும்போது, கடந்த 24 மணிநேரத்தில் கனமழையால் காணாமல் போன 15 பேரை மீட்பதற்காக மாநில பேரிடர் பொறுப்பு படை மற்றும் தேசிய பேரிடர் பொறுப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். 5 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் சிறந்த முறையில் நடந்து வருகின்றன. மாண்டி, சம்பா, காங்ரா, குல்லு, ஹமீர்பூர் மற்றும் சிம்லா மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.

எனினும், இமாசல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்து உள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, 12க்கும் மேற்பட்டோர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.


Next Story