மும்பையில் பணியில் இருந்த பெண் டாக்டர் மீது மதுபோதையில் வந்த நோயாளி தாக்குதல்


மும்பையில் பணியில் இருந்த பெண் டாக்டர் மீது மதுபோதையில் வந்த நோயாளி தாக்குதல்
x

Image Courtesy : PTI

மும்பையில் பணியில் இருந்த பெண் டாக்டர் மீது மதுபோதையில் வந்த நோயாளி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் முகத்தில் காயங்களுடன் ஒரு நபர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருடன் சுமார் 6 பேர் வரை வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது பெண் டாக்டர் ஒருவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில், காயங்களுடன் வந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது, மதுபோதையில் இருந்த நோயாளியும், அவருடன் வந்தவர்களும் பெண் டாக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் அந்த பெண் டாக்டருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையை விட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் டாக்டர் சியோன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது மும்பையில், பணியில் இருந்த பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story