கால்வாயில் கார் பாய்ந்து விவசாயி சாவு


கால்வாயில் கார் பாய்ந்து விவசாயி சாவு
x

மண்டியாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தார்.

மண்டியா:

மண்டியாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தார்.

கால்வாயில் பாய்ந்த கார்

மண்டியா (மாவட்டம்) தாலுகா திப்பனஹள்ளியை அடுத்த சிவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 44), விவசாயியான இவர், சொந்தமாக மருந்துக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று சிவள்ளியில் இருந்து பாண்டவபுராவிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். திப்பனஹள்ளியில் உள்ள விஸ்வேசுவரய்யா கால்வாய் அருகே சென்றபோது, கார் லோகேசின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

இதை பார்த்த லோகேஷ் காரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தார். ஆனால் நிற்காமல் சென்ற கார், சாலையோரம் இருந்த விஸ்வேசுவரய்யா கால்வாய்க்குள் பாய்ந்தது. ஏற்கனவே அந்த கால்வாய் 18 அடி ஆழம் என்று கூறப்படுகிறது. மேலும் கிருஷ்ணராஜ சாகர் (கே.எஸ்.ஆர்.) அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

விவசாயி சாவு

இதனால் கார் பாய்ந்த வேகத்தில் நீரில் அடித்து செல்லப்பட்டது. இருப்பினும் லோகேஷ் காரில் இருந்து வெளியே வந்து, தப்பி செல்வதற்கு முயற்சித்தார். ஆனால் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவரால் நீந்தி வெளியே வர முடியவில்லை. நீரில் அடித்து செல்லப்பட்டார். இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனே இதுகுறித்து மண்டியா புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொக்லைன் உதவியுடன் காரை மீட்டனர்.

ஆனால் லோகேசை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மாயமாகியிருந்தார். இதனால் அவர் இறந்ததாக உறுதி செய்த போலீசார் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த விபத்து குறித்து மண்டியா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story