மத்திய அரசிடம் இருந்து ஆண்டுதோறும் விவசாயிகள் ஒவ்வொருவரும் ரூ.50 ஆயிரம் பெறுகின்றனர்- பிரதமர் மோடி


மத்திய அரசிடம் இருந்து ஆண்டுதோறும் விவசாயிகள் ஒவ்வொருவரும் ரூ.50 ஆயிரம் பெறுகின்றனர்- பிரதமர் மோடி
x

மத்திய அரசிடம் இருந்து ஆண்டுதோறும் விவசாயிகள் ஒவ்வொருவரும் ரூ.50 ஆயிரம் பெறுகின்றனர் என பிரதமர் மோடி பேசினார்.

கூட்டுறவு மாநாடு

சர்வதேச கூட்டுறவு சங்க தினத்தையொட்டி, 17-வது இந்திய கூட்டுறவு மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்போர், கூட்டுறவு இயக்கத்தின் பல்வேறு போக்குகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள், எதிர்கொள்ளப்படும் சவால்களுடன், வருங்காலத்தில் இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சிக்கான நடவடிக்கை கொள்கைகளை வகுப்பது குறித்து விவாதிக்கின்றனர்.

பிரதமர் மோடி பேச்சு

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:-

மத்தியில் பா.ஜ.க. அரசு கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், விவசாயிகள் நலத்துக்காக பிரதமர் கிசான் திட்டம், குறைந்த பட்ச ஆதார விலை நடவடிக்கைகள், உர மானியம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளின் உற்பத்தியை கொள்முதல் செய்ததன் மூலம், கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும்ரூ.6½ லட்சம் கோடி

கடந்த ஆண்டு உர மானியத்துக்காக மட்டும் ரூ.10 லட்சம் கோடியை அரசு செலவிட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் நலம், வேளாண்மைத் துறைக்காக மத்திய அரசு சுமார் ரூ.6½ லட்சம் கோடியை செலவழிக்கிறது.

விவசாயிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம்

விவசாயிகள் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் அரசிடம் இருந்து பல்வேறு வழிகளில் ரூ.50 ஆயிரம் பெறுகின்றனர். அதை பா.ஜ.க. அரசு உத்தரவாதப்படுத்தியுள்ளது. இது மோடியின் உத்தரவாதம். எங்கள் அரசு செய்ததைத்தான் நான் சொல்கிறேனே தவிர, வாக்குறுதிகள் அளித்ததை அல்ல. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2½ லட்சம் கோடி, விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது.

பெரிய தொகை

2014-ம் ஆண்டுக்கு முன்பு, ஐந்தாண்டுகளுக்கான மொத்த விவசாய பட்ஜெட் ரூ.90 ஆயிரம் கோடிக்கும் குறைவாக இருந்த நிலையில், இது எவ்வளவு பெரிய தொகை என்பது உங்களுக்குப் புரியும்.''

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story