கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா?; இந்திய தேர்தல் கமிஷனர் பெங்களூருவில் ஆலோசனை


கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா?; இந்திய தேர்தல் கமிஷனர் பெங்களூருவில் ஆலோசனை
x

இந்திய தேர்தல் கமிஷனர் அனுப்சந்திர பாண்டே கர்நாடகம் வந்துள்ளார். அவர் தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு:

நாடாளுமன்ற தேர்தல்

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் அனுப்சந்திர பாண்டே 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்துள்ளார். அவர் நேற்று பெங்களூருவில் உள்ள பி.இ.எல். நிறுவனத்திற்கு நேரில் வந்து, அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எந்திரங்கள் உற்பத்தி குறித்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் பிற அதிகாரிகளுடன் அனுப்சந்திர பாண்டே ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் பூத் மட்டத்தில் செயல்படும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியல் திருத்தம், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு மற்றும் பிற தேர்தல் தொடர்பான விஷயங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார். அவருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

குஜராத் சட்டசபை

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதனால் தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை இப்போது இருந்தே தொடங்கி இருக்கிறது. குஜராத் சட்டசபைக்கு வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

அத்துடன் முன்கூட்டியே கர்நாடக சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இது ஒரு உறுதியற்ற தகவல். அடுத்து வரும் நாட்களில் தான் இதுகுறித்து விவரங்கள் தெரியவரும். கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.


Next Story