எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஆகஸ்டு 3-ந்தேதிக்கு ஒத்திவைப்பு


எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஆகஸ்டு 3-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
x

கோப்புப்படம்

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை ஆகஸ்டு 3-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைப்பணிகளை மேற்கொள்ள நடந்த டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை கடந்த 2018-ம் ஆண்டு விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விசாரிக்க கோரி தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு தமிழ்நாடு ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் நேற்று முன்தினம் முறையிட்டது. இதனையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை என்.வி.ரமணா அமர்வு முன்பு விசாரணை நேற்று நடந்தது.

ஆகஸ்டு 3-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வக்கீல் பாலாஜி ஸ்ரீநிவாசன், 'சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் திடீரென முறையிட்டது குறித்த தகவலை தங்கள் தரப்புக்கு தெரிவிக்கவில்லை. இது முறையல்ல' என புகார் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான வக்கீல்கள் என்.ஆர்.இளங்கோ, விவேக் சிங் ஆகியோர், 'தமிழக அரசின் கூடுதல் தலைமை வக்கீலாக அமித் ஆனந்த் திவாரி நியமிக்கப்பட்டுள்ளதால், ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜராக முடியாது. எனவே வேறொரு வக்கீலை நியமிக்க வேண்டி உள்ளது' என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்டு 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும் இனி வழக்கு விசாரணையை தள்ளிவைக்க கோரும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story