சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் இந்திய பகுதிகளில் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? ஆய்வாளர்கள் கூறுவது என்ன...?


சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் இந்திய பகுதிகளில் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? ஆய்வாளர்கள் கூறுவது என்ன...?
x
தினத்தந்தி 8 Feb 2023 4:12 PM GMT (Updated: 9 Feb 2023 1:32 AM GMT)

துருக்கியில் ஏற்பட்டது போல சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் இந்திய பகுதிகளில் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

துருக்கியில் ஏற்பட்டது போல சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் இந்திய பகுதிகளில் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய தட்டுக்கள் ஆசியாவை நோக்கி தோராயமாக ஆண்டுக்கு 47 மி.மிட்டர் என்ற விகிதத்தில் திபெத்த்திய பீடபூமியின் உயரத்தை ஈடுகட்ட நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இமயமலை மற்றும் அல்டின் தாக்ஹ், ஷான் மலைப்பகுதிகள் தனது இயல்பான நிலையை இழக்கக்கூடும்.

அதேபோல், ஆசியா மற்றும் இந்திய பகுதிகளில் நிலையான அதேவேளையில் கணிக்க முடியாத தொடர்ச்சியான நிலநடுக்கங்களுக்கு காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இமயமலைப்பகுதிகளில் மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக கடந்த ஆண்டு விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தனர். அதேபோல், நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில் உயிர் மற்றும் பொருட்சேதங்களை குறைப்பதற்கான வழிகளை நோக்கி முன்கூட்டியே செயல்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகளின் எச்சரிக்கையாக இருந்தது.

இது தொடர்பாக புவியியல் வல்லுனரான அஜய் பவுல் கூறுகையில், இந்தியன் மற்றும் யூரோசியன் பிளேட்களின் மோதலால் இமயமலை தோன்றியது. இந்திய பிளேட்கள் மீது யூரேசிய பிளேட்கள் கொடுக்கும் தொடர் அழுத்தத்தால் அவ்வப்போது நிலநடுக்கங்களாக வெளிப்பட்டு வருகிறது.

அழுத்தப்பட்ட ஆற்றல் எப்போது வெளிப்படும் என்பது பற்றியோ... நிலநடுக்கங்கள் எப்போது ஏற்படும் என்பது குறித்தோ கணிக்க முடியாது. இது எப்போது ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்த தருணத்தில் கூட ஏற்படலாம்.. அல்லது அடுத்த மாதம் ஏன் 100 ஆண்டுகளுக்கு பிறகு கூட நடைபெறலாம். கடந்த 150 ஆண்டுகளில் இமயமலை பகுதிகளில் 4 மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

ஷில்லாங்கில் கடந்த 1897 ஆம் ஆண்டிலும் கங்க்ராவில் 1905 ஆம் ஆண்டிலும் பீகார் - நேபாளத்தில் 1934 ஆம் ஆண்டிலும் அசாம் மாநிலத்தில் 1950 ஆம் ஆண்டிலும் மிகப்பெரிய நில அதிர்வுகள் உணரப்பட்டு இருக்கின்றன. இந்திய நிலப்பரப்பில் 59 சதவீதம் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான இடங்களாக வகைப்படுத்தியிருக்கின்றனர். இதனால், கடந்த கால பாடங்களில் இருந்தும் எதிர்வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளவும் இந்தியா தயராகி உள்ளதா? என்பது பில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.

ஏனெனில் நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலான கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டால் நிலநடுக்கங்களின் போது பெருமளவு சேதத்தை தவிர்க்க முடியும். எனவே அதற்கேற்ற திட்டமிடலுடன் இந்தியா செயல்பட வேண்டும் என்பது நிபுணர்களின் வாதமாக இருக்கிறது. தற்போது நிலநடுக்கத்தால் கடும் உயிர்சேதத்தையும் பொருட்சேதத்தையும் எதிர்கொண்டு இருக்கும் துருக்கி கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்காததே இந்த நிலைக்கு காரணம் என்றும் ஆய்வாளர்கள் வைக்கும் ஒரு கருத்தாக உள்ளது.


Next Story