ரூ.10 லட்சம் போதைப்பொருளுடன் நைஜீரிய வாலிபர் பிடிபட்டார்


ரூ.10 லட்சம் போதைப்பொருளுடன் நைஜீரிய வாலிபர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 17 July 2023 6:45 PM GMT (Updated: 17 July 2023 6:46 PM GMT)

பெங்களூருவில் போதைப்பொருட்களுடன் நைஜீரிய வாலிபர் பிடிபட்டார்.

:காடுகோடி

பெங்களூரு காடுகோடி பகுதியில் போதைப்பொருட்கள் விற்க ஒரு நபர் முயற்சிப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு போலீசார் விரைந்து சென்றனர். காடுகோடியில் உள்ள மைதானம் அருகே சந்தேகப்படும் படியாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சோதனை நடத்திய போது போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை போலீசார் கைது செய்தார்கள். விசாரணையில், அவர் நைஜீரியாவை சேர்ந்த மார்க் ஜஸ்டீஸ் (வயது 32) என்று தெரிந்தது. இவர், பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு போதைப்பொருளை விற்று பணம் சம்பாதித்தது தெரியவந்தது.

இதையடுத்து, கைதான மார்க் ஜஸ்டீசிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 70 கிராம் கொகைன் போதைப்பொருள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான மார்க் ஜஸ்டீஸ் மீது காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story