போதையால் பாதை மாறும் மாணவர்கள் - நல்வழிப்படுத்துவது எப்படி?


போதையால் பாதை மாறும் மாணவர்கள் - நல்வழிப்படுத்துவது எப்படி?
x

போதையால் பாதை மாறும் மாணவர்களை நல்வழிப்படுத்துவது எப்படி என்பது குறித்து இங்கு காண்போம்.

பெங்களூரு:

குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாகப் பார்க்கப்பட்டன. இப்போது அது ஒரு கவுரமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறைகள் அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிற போது வெட்கப்பட்டே தீரவேண்டும்.

விதிகளால் என்ன பயன்?

கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.

21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.

விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.

புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுப்பாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.

முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.

இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.

இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிநிலைக்கு இழுத்துப்போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின்னாட்களில் சமூகக் குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.

ஆணுறைகள் சிக்கின

பெங்களூருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பள்ளிகளில் மாணவர்களின் புத்தக பைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது மாணவர்களின் பைகளில் இருந்து ஆணுறை, தண்ணீர் கலந்த மதுபானம் ஆகியவையும், ஒரு மாணவியின் பையில் இருந்து கருத்தடை மாத்திரையும் கண்டெடுக்கப்பட்டது. இது இன்றைய கால மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை காட்டும் விதமாக அமைந்து இருந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா, போதைப்பொருட்கள் கிடைப்பது மிகவும் அபூர்வமாக இருந்தது. ஆனால் தற்போது சர்வ சாதாரணமாக கஞ்சா, போதைப்பொருட்கள் கிடைத்து வருகிறது. இதனால் கஞ்சா, போதைப்பொருட்கள் எப்படி உள்ளது என்று பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் ஆசையும் எழுகிறது.

டார்க்நெட் இணையதளம் மூலம்...

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனையாளர்கள் மாணவர்களுக்கு கஞ்சா, போதைப்பொருட்களை விற்று அதிக அளவில் சம்பாதித்து வருகின்றனர். போதைப்பொருட்களை உட்கொள்ளும் மாணவர்கள் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். இதனால் அவர்கள் பெற்றோரிடம் போதைப்பொருட்களை வாங்க பணம் கேட்டு தொந்தரவு கொடுத்தும் வருகின்றனர். பெற்றோர் பணம் கொடுக்க மறுத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர்.

பெங்களூரு நகரில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா, போதைப்பொருட்களை விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. போதைப்பொருள் விற்பனையில் கைது செய்யப்படுவர்கள் சிறைக்கு சென்று வந்த பின்னரும் அந்த தொழிலை செய்து வருகின்றனர். மேலும் டார்க்நெட் இணையதளம் மூலமும் போதைப்பொருட்கள் கிடைப்பதால் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம். போதைப்பொருட்களை உட்கொள்பவர்கள் குற்றச்சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூருவில் பல குற்ற வழக்குகளில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சிக்கி வருகிறார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், போதைப்பழக்கத்தால் வாழ்க்கை தடம்புரண்ட அதிர்ச்சி தகவலும் வெளியாகி வருகிறது.

எனவே போதைப் பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

உயிரை மாய்த்து கொள்கின்றனர்

பெங்களூரு ஆனந்தபுரத்தை சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுனர் மல்லிகா, "பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்போது கஞ்சா, போதைப்பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். எனது கண்முன்பே நிறைய மாணவர்கள் வாழ்க்கை வீணாகி போனதை கண்டு வேதனைப்பட்டு இருக்கிறேன். போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்று தெரிவது இல்லை. போதைப்பொருள் கிடைக்காவிட்டால் கையை அறுப்பது, பெற்றோரை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதியில் அவர்கள் தங்களது உயிரையும் மாய்த்து கொள்கின்றனர். எதிர்காலத்தை உருவாக்கும் மாணவர்கள் சமுதாயம் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது கலாசார சீரழிவு. இதனை தடுத்தே ஆக வேண்டும்" என்றார்.

கவுன்சிலிங் வழங்க வேண்டும்

சமூக ஆர்வலரான அல்லா மூர்த்தி, "போதைப்பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள் வாழ்க்கை நிச்சயமாக சீரழிந்து தான் போகும். செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி காரணமாக மாணவர்கள் கையில் போதைப்பொருட்கள் எளிதாக சிக்குகிறது. பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதனை தடுக்க அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவர்களின் நடவடிக்கைகளை பெற்றோரும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் நடவடிக்கையில் ஏதாவது மாற்றம் தெரிந்தால் அவர்களிடம் பேசி என்ன பிரச்சினை என்று கேட்க வேண்டும். மேலும் அவர்களுக்கு கவுன்சிலிங்கும் வழங்க வேண்டும்" என்றார்.

அரசு ஒழிக்க வேண்டும்

பெங்களூரு சலுவதிபாளையாவை சேர்ந்த அலிமுத்து, "மாணவர்களை சீரழிக்கும் போதைப்பொருட்களை முதலில் ஒழிக்க வேண்டும். போதைப்பொருட்கள் குடும்பங்களை சீரழிக்கின்றன. மாணவர்கள் வாழ்க்கையை போதைப்பொருட்களை தடம்புரள செய்கின்றன. போதைப்பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள், சிறுவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதையில் இருக்கும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிவது இல்லை. போதைப்பொருள் பழக்கத்தால் மாணவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் சுற்றித்திரிகின்றனர். இது பார்க்கவே வேதனையாக உள்ளது. மாணவர் சமுதாயத்தை பாதுகாக்க போதைப்பொருட்களை அரசு ஒழித்தே தீர வேண்டும்.

பெற்றோரின் அன்பு

சாம்ராஜ்பேட்டையில் வசித்து வரும் பிரபாகரன், "சாம்ராஜ்பேட்டை பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. புத்தகங்களை கையில் எடுத்து செல்ல வேண்டிய மாணவர்கள், போதைப்பொருட்களுடன் சுற்றுவது வேதனை அளிக்கும் விஷயம். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட பெங்களூருவில் பள்ளி மாணவர்கள் பைகளில் இருந்து சில விரும்பத்தகாத பொருட்கள் சிக்கின. இது மனதிற்கு வேதனை அளிக்கிறது. அந்த மாணவர்களின் பெற்றோரின் நிலையை சற்று நினைத்து பார்க்க வேண்டும்.

போதைப்பொருட்களை உட்கொள்ளும் மாணவர்கள் வாழ்க்கை அடியோடு தடம் புரளுகிறது. மாணவர்களை பாதுகாக்க போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிரம் காட்ட வேண்டும். பெற்றோர் பிள்ளைகளையும் கண்காணிக்க வேண்டியது அவசியம். பெற்றோரின் அன்பு சரியாக கிடைக்காத மாணவர்கள் தான் தவறான வழியை தேர்ந்து எடுக்கின்றனர்" என்றார்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

சிவமொக்கா பி.எச்.சாலையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகனாச்சாரி, "போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு அடிமையாகும் மாணவர்கள் படிப்பையும், வாழ்க்கையும் தொலைத்து விடுகின்றனர். பள்ளி வளாகங்களை சுற்றியுள்ள பெட்டி கடைகள், பானி பூரி கடைகள், ஐஸ் வண்டிகளில் வைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று போலீசார் கவனித்தாலே, மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு ஆளாகுவதை தடுத்து விடலாம். ஒவ்வொரு பள்ளியிலும் ஏதாவது ஒரு மாணவன் போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருப்பான். அவனை கண்டுபிடித்து சிறார் சிறையில் அடைக்க வேண்டும்.

அப்படி செய்தால் இன்னொரு மாணவன் போதைப்பொருளை பயன்படுத்த முன்வர மாட்டான். பள்ளிகளில் மாதத்திற்கு 2 முறை போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தங்களது பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு தினமும் பெற்றோர் பணம் கொடுக்கின்றனர். அந்த பணத்தை என்ன செலவு செய்தாய் என்று மாணவர்களிடம் பெற்றோர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

மாணவர்கள் நல்லப் பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொண்டு கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமே தவிர, போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தவறான பாதையில் சென்று வாழ்க்கையில் தடம் மாறி விடக்கூடாது என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுரையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றன.


Next Story