பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு


பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2022 9:34 PM IST (Updated: 22 Jun 2022 10:28 AM IST)
t-max-icont-min-icon

பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனிடையே, குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக அறிவித்தது.

இதையடுத்து, பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற்றது. டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, திரௌபதி முர்மு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என அறிவித்தார்.

யார் இந்த திரௌபதி முர்மு ?

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் கடந்த 1958-ம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி பிறந்தார் திரவுபதி முர்மு. இவரது தந்தை பெயர் பிராஞ்சி நாராயண் டுடு. இவர் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஜார்க்கண்டில் அதிக அளவில் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அசாம், திரிபுரா, பீகார், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இந்த சமூகத்தினர் அதிகம் பேர் வசித்து வருகின்றனர்.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் திரவுபதி முர்மு படித்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். மகன்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனர். அரசியல் ஆர்வம் காரணமாக திரவுபதி முர்மு பாஜகவில் இணைந்தார். ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் (2000-2004) வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை மந்திரியாகவும், கால்நடை வளர்ச்சித் துறை மந்திரியாகவும் இருந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மே 18ம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் கவர்னராக பதவி வகித்தார். ஜார்க்கண்டின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையும் திரௌபதி முர்மு பெற்றார். அத்துடன், ஒடிசா மாநிலத்திலிருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரு மாநிலத்தின் கவர்னராக்கப்பட்டதும் அதுவே முதல் முறையாகும்.


Next Story