டாக்டர் பலாத்கார வழக்கு; மம்தா பானர்ஜியிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும்: பா.ஜ.க.


டாக்டர் பலாத்கார வழக்கு; மம்தா பானர்ஜியிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும்:  பா.ஜ.க.
x

நாட்டில் சர்வாதிகாரி என யாரேனும் இருக்கிறார் என்றால் அது மம்தா பானர்ஜிதான் என்றும் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கவுரவ் பாட்டியா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நாடு முழுவதும் டாக்டர்களின் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.

இந்த சூழலில், நபன்னாவில் உள்ள மேற்கு வங்காள தலைமை செயலகம் நோக்கி திட்டமிடப்பட்ட பேரணி ஒன்றை நடத்துவது என பொதுமக்களில் ஒரு பிரிவினர் சார்பில் முடிவானது. இதற்கு தடை கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் சில நாட்களுக்கு முன் வழக்கு தொடரப்பட்டது.

எனினும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமையை சுட்டி காட்டி, அதற்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்து விட்டது. இதனால், இன்று (27-ந்தேதி) பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால், மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. போராட்டத்திற்கு மேற்கு வங்காள அரசு அனுமதி அளிக்கவில்லை.

இந்த சூழலில், நபன்னா அபியான் பேரணி இன்று நடைபெற்றது. இதில் மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைந்து போக செய்தனர்.

ஹவுரா பாலம், சந்திரகாச்சி ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்காரர்கள் சிலரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் கவுரவ் பாட்டியா இன்று கூறும்போது, நாட்டில் சர்வாதிகாரி என யாரேனும் இருக்கிறார் என்றால் அது மம்தா பானர்ஜிதான். உண்மை வெளிவர வேண்டும். மம்தா பானர்ஜி மற்றும் காவல் ஆணையாளரிடம் சி.பி.ஐ. அமைப்பு, உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

உண்மையை வன்முறையை கொண்டு அடக்க முடியாது. இந்த நபர்கள் மாணவர்களை நசுக்க பார்க்கிறார்கள். அரசியலமைப்பை துண்டுகளாக கிழித்து போடுகிறார்கள். இதனை சகித்து கொள்ள முடியாது. இந்த விவகாரம் இன்று எழுப்பப்பட்டதுபோல், இன்னும் வலிமையாக எழுப்பப்படும் என்று கூறியுள்ளார்.


Next Story