தண்டவாளத்தில் இருந்து ரீல்ஸ் எடுத்தபோது விபரீதம்... தம்பதி, 3 வயது மகன் ரெயில் மோதி உயிரிழப்பு


தண்டவாளத்தில் இருந்து ரீல்ஸ் எடுத்தபோது விபரீதம்... தம்பதி, 3 வயது மகன் ரெயில் மோதி உயிரிழப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 11 Sep 2024 11:38 AM GMT (Updated: 11 Sep 2024 12:33 PM GMT)

உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தில் இருந்து ரீல்ஸ் எடுத்த தம்பதி மற்றும் அவர்களது 3 வயது மகன் ரெயில் மோதி உயிரிழந்தனர்.

உத்தர பிரதேசம்,

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்வதற்காக பலர் தங்களது உயிரை துச்சமாக எண்ணி ரிஸ்க் எடுத்து வருகின்றனர். இதில் சில விபத்துக்கள் ஏற்பட்டு ஒரு சிலர் தங்கள் உயிரையும் பறிகொடுத்துள்ளனர்.

அந்த வகையில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் தண்டவாளத்தில் இருந்து ரீல்ஸ் எடுத்த தம்பதி மற்றும் அவர்களது 3 வயது மகன் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீதாபூர் மாவட்டத்தில் உள்ள லஹர் பூரில் வசிக்கும் முகமது அகமது (26 வயது), அவரது மனைவி நஜ்னீன் (24 வயது) மற்றும் அவர்களது 3 வயது மகன் அப்துல்லா மூவரும் உமரியா கிராமத்திற்கு அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் இருந்து ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த ரெயில் அவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story