கர்நாடக சட்டசபை தேர்தலில் ஊழல், வெறுப்பு அரசியலுக்கு எதிராக காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது; ராகுல்காந்தி பேச்சு


கர்நாடக சட்டசபை தேர்தலில் ஊழல், வெறுப்பு அரசியலுக்கு எதிராக காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது; ராகுல்காந்தி பேச்சு
x
தினத்தந்தி 20 May 2023 6:45 PM GMT (Updated: 20 May 2023 6:46 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஊழல், வெறுப்பு அரசியலுக்கு எதிராக காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது என்று ராகுல்காந்தி கூறினார்.

பெங்களூரு:

ராகுல் காந்தி

கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் மற்றும் 8 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். இதற்காக பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டு சித்தராமையா உள்ளிட்டோரை வாழ்த்தினர். விழாவில் ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது:-

தேர்தல் பிரசாரத்தின்போது நாங்கள்(காங்கிரஸ்) அறிவித்த 5 முக்கிய வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும். கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி, 'வெறுப்புக்கும், ஊழலுக்கும்' எதிராக கிடைத்த வெற்றி ஆகும்.

200 யூனிட் இலவச மின்சாரம்

அதாவது பா.ஜனதாவின் வெறுப்பு அரசியலுக்கும், அவர்கள் செய்த ஊழலுக்கும் எதிராக மக்கள் வாக்களித்து காங்கிரசுக்கு வெற்றியை தந்திருக்கிறார்கள். நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதில்லை. நாங்கள் செய்வதை மட்டுமே சொல்லுவோம். நாங்கள் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகளுக்கு உடனடியாக சட்ட வடிவம் கொடுக்கப்படும்.

அதாவது வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, பி.பி.எல்.(வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்) ரேஷன் கார்டுகளுக்கு வீட்டில் உள்ள உறுப்பினர்களை கணக்கிட்டு தலா 10 கிலோ அரிசி வழங்கும் திட்டம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 வருடங்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை, டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் தலா ரூ.1,500 ஆகியவையும், பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க சக்தி திட்டத்தையும் உடனடியாக அம்ல்படுத்துவோம்.

நன்றி உணர்வோடு இருப்பேன்

காங்கிரஸ் கர்நாடக சட்டசபை தேர்தலை உண்மையையும், ஏழை மக்களையும் அடிப்படையாக கொண்டு எதிர்கொண்டது. ஆனால் பா.ஜனதா பண பலம், ஆளுமை, போலீஸ் ஆகியோரின் துணையோடு எதிர்கொண்டது. இருப்பினும் பா.ஜனதாவை மக்கள் தோற்கடித்தனர். நாங்கள் நடத்திய பாதயாத்திரையும், மக்கள் மீது காட்டிய அன்பும் பா.ஜனதாவை தோற்கடித்தது.

இந்த மாபெரும் வெற்றியை அளித்த கர்நாடக மக்களுக்கு நான்(ராகுல்காந்தி) எப்போதும் என் முழுமனதுடன் நன்றி உணர்வோடு இருப்பேன்.

நாங்கள்(காங்கிரசார்) கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள்(மக்கள்) பட்ட கஷ்டங்களை புரிந்து கொண்டுள்ளோம்.

மலைவாழ் மக்கள்

ஊடகத்தினர் காங்கிரஸ் வெற்றி குறித்து பல வகைகளில் தங்களது கருத்தை எழுதினர். பல்வேறு ஆய்வுகள், கட்டுரைகள் வெளிவந்தன. ஆனால் காங்கிரஸ் வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணம் ஏழைகள், பின்தங்கிய மக்கள், தலித் மற்றும் மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி இருப்பது தான்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.


Next Story