ஒக்கலிகர் சமூகத்துக்கு முதல்-மந்திரி பதவி; டி.கே.சிவக்குமார் சூசகம்


ஒக்கலிகர் சமூகத்துக்கு முதல்-மந்திரி பதவி; டி.கே.சிவக்குமார் சூசகம்
x
தினத்தந்தி 27 Nov 2022 6:45 PM GMT (Updated: 27 Nov 2022 6:46 PM GMT)

ஒக்கலிகர் சமூகத்துக்கு முதல்-மந்திரி பதவி வாய்ப்பு வந்துள்ளதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

இட ஒதுக்கீடு

கர்நாடகத்தில் பஞ்சமசாலி சமூகத்தினர், தங்கள் சமூகத்திற்கு 2ஏ இட ஒதுக்கீடு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் தங்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு நீண்ட காலமாக போராடி வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான இட ஒதுக்கீடு 18 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் குருப சமூகம், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இப்போது ஒக்கலிகர் சமூகம், தங்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை 4 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுள்ளது.

கர்நாடக ஒக்கலிகர்கள் சங்க கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, மடாதிபதி நஞ்சாவதூத சுவாமி, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் அந்த சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஒக்கலிகர் சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க மாநில அரசை வலியுறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

தவற விட வேண்டாம்

இதுகுறித்து பேசிய குருகுன்ட பிரமேஸ்வரா மடாதிபதி நஞ்சாவதூத சுவாமி பேசுகையில், "கர்நாடகத்தில் ஒக்கலிகர் சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இவ்வளவு நாட்களாக நாம் அமைதியாக இருந்தோம். இனிமேலும் பொறுமையாக இருக்க முடியாது. ஒக்கலிகர் சமூகத்திற்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதை வருகிற ஜனவரி மாதம் 23-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் இட ஒதுக்கீட்டு போராட்டத்திற்கு நீங்கள் தயாராக வேண்டும்" என்றார்.

இதில் பேசிய டி.கே.சிவக்குமார், "நான் ஒக்கலிகர் சங்கத்தில் இருக்கிறேன். இந்த முறை ஒரு வாய்ப்பு (முதல்-மந்திரி பதவி) உங்கள் வீடு தேடி வந்துள்ளது. இந்த பொன்னான வாய்ப்பை நீங்கள் தவற விட வேண்டாம். உங்களின் ஆசி என் மீது இருக்கட்டும். இங்கு நான் ஏதாவது பேசினால் அது அரசியல் ஆகிவிடுகிறது. அதனால் நான் அதிகம் பேச விரும்பவில்லை" என்றார்.

காங்கிரஸ் வெற்றி

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், தான் முதல்-மந்திரி ஆகக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் டி.கே.சிவக்குமார் சூசகமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story