சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல்; 2-வது கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு


சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல்; 2-வது கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 18 Oct 2023 2:56 PM GMT (Updated: 18 Oct 2023 4:28 PM GMT)

சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலுக்கான 2-வது கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராய்ப்பூர்,

தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை கடந்த 9-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி சத்தீஷ்காரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்காரில் முதல் கட்டத்தில் 20 தொகுதிகளுக்கும், 2-வது கட்டத்தில் 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், சத்தீஷ்காரில் காங்கிரஸ் கட்சியின் 30 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் கடந்த ஞாயிற்று கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, பதன் தொகுதியில் இருந்து சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் போட்டியிடுகிறார். துணை முதல்-மந்திரி டி.எஸ். சிங் தியோ, அம்பிகாபூர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி தேர்ந்தெடுத்து அறிவித்தது. இந்நிலையில், 53 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டு உள்ளது.

இதில், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவரான மோதிலால் வோராவின் மகனான அருண் வோராவை, துரக் சிட்டி தொகுதியில் மீண்டும் நிறுத்த முடிவாகி உள்ளது. ராஜ்யசபையின் முன்னாள் உறுப்பினரான சாயா வர்மா, தர்சிவா தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டு உள்ளது.


Next Story