'சந்திரயான்-3 வெற்றி இந்தியர்களின் மதிப்பை உயர்த்தியுள்ளது' - முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்


சந்திரயான்-3 வெற்றி இந்தியர்களின் மதிப்பை உயர்த்தியுள்ளது - முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்
x

இந்த வெற்றி இளைய தலைமுறைக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும் என்று விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்தார்.

திருவனந்தபுரம்,

நிலவின் தென் துருவத்தில், இதுவரை யாரும் ஆய்வு செய்யாத இடத்தில் தடம் பதிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்தது.

தொடர்ந்து நிலவு வட்டப்பாதையில் சுற்றி கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டர் கருவி வெளியே கொண்டுவரப்பட்டு, அதே வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே நிலவை நெருங்கி சென்றது. நிலவை தொட்டுவிடும் தூரத்தில் லேண்டர் கருவி சுற்றி வந்தது.

இன்று மாலை 5.46 மணியளவில் விக்ரம் லேண்டரை நிலவின் தரை பகுதியில் இறக்கும் கட்டம் தொடங்கியது. படிப்படியாக ஒவ்வொரு நிலைகளையும் கடந்து, நிலவில் மெதுவாக விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. இதன்மூலம் விண்வெளி துறையில் இந்தியா வல்லரசாகி உள்ளது.

இந்த நிலையில் சந்திரயான்-3 வெற்றி குறித்து முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது;-

"சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. அங்கிருந்து புகைப்படங்கள் கிடைப்பதற்கு நாம் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். நிலவில் காற்று இல்லாததால், லேண்டர் தரையிறங்கிய இடத்தில் கிளம்பிய புழுதி அடங்குவதற்கு சுமார் 2 மணி நேரம் வரை ஆகலாம்.

அதன் பிறகு இதுவரை யாரும் பார்க்காத பகுதிகளை நாம் பார்க்கப் போகிறோம். இதை உலகிற்கு காட்டுவதில் நாம் ஒரு கருவியாக இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றி இஸ்ரோவின் மதிப்பு மட்டுமின்றி, இந்தியர்களின் மதிப்பையும் உயர்த்தியுள்ளது.

இந்தியர்களை சாதாரணமாக நினைக்க முடியாது. இன்று நடந்தது மிக முக்கியமான நிகழ்ச்சி. இளைய தலைமுறைக்கு இது மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும். இது குறித்து படிப்பதற்கான ஆர்வம் இளைஞர்களிடம் ஏற்படும். எனவே இதை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்."

இவ்வாறு விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்தார்.




Next Story