கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி


கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி
x

கோப்புப்படம்

மருத்துவமனை முன்னாள் முதல்வர் உள்பட 4 டாக்டர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கடந்த 9-ம் தேதி காயங்களுடன் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு எதிராக மேற்கு வங்காளம் மட்டுமின்றி நாடு முழுவதும் டாக்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த போராட்டத்துக்கு மத்தியில் கடந்த 15-ம் தேதி அதிகாலையில் ஆர்.ஜி.கர் ஆஸ்பத்திரியில் ஒரு கும்பல் புகுந்து சூறையாடியது. இதில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவு, மருந்து அறை உள்ளிட்ட பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டது. பெண் டாக்டர் கொலையில் ஆதாரங்களை அழிப்பதற்கு நடந்த முயற்சி இது என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். இந்த வன்முறை தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே பெண் டாக்டரின் கொலைக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த சூழலில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை வந்தது. அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட், போராட்டம் நடத்திவரும் டாக்டர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கினார். ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது. கொல்கத்தா டாக்டர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

இதனைத்தொடர்ந்து பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவத்தன்று பணியில் இருந்த மருத்துவமனை முன்னாள் முதல்வர் உள்பட 4 டாக்டர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

முன்னதாக மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட 4 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.ஐ. மனு தாக்கல் செய்திருந்தது. சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவை விசாரித்த சியால்தா நீதிமன்றம், உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story