காவிரி ஆணைய உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை


காவிரி ஆணைய உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை
x

சுப்ரீம் கோர்ட்டில் இரு மாநில அரசுகளும் தங்களது கோரிக்கைகளை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உள்ளன

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்துக்கு தர வேண்டிய நிலுவை தண்ணீரை 25 ஆயிரம் கன அடி வீதம் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு தமிழக அதிகாரிகள் வற்புறுத்தினார்கள். ஆனால் கர்நாடக அதிகாரிகள். அணைகளில் தங்களுக்கே தண்ணீர் இல்லை. எனவே தமிழகம் கேட்கும் தண்ணீரை தர முடியாது. வேண்டுமென்றால் 3 ஆயிரம் கன அடி வீதம் திறக்கிறோம் என்றனர். இதனை காவிரி மேலாண்மை ஆணையம் மறுத்து 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை கர்நாடக அரசும், தமிழ்நாடு அரசும் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. 5 ஆயிரம் கன அடி என்பது போதுமானதாக இருக்காது என தமிழகம் கருதுகிறது. அதைப்போல தண்ணீர் தருவது கடினம் என கர்நாடக அரசும் கருதுகிறது. இதனால் இரு மாநில அரசுகளும் சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்து இருந்தன.

இதன்பேரில் தங்களது கோரிக்கைகளை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உள்ளன. பெரும்பாலும் இன்று (வியாழக்கிழமை ) தாக்கல் ஆகலாம் என தெரிகிறது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து இருந்த வழக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது. இதற்குள் காவிரி மேலாண்மை ஆணையமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதனால் வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story