வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு பா.ஜனதா துரோகம் செய்கிறது- சித்தராமையா குற்றச்சாட்டு


வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு பா.ஜனதா துரோகம் செய்கிறது- சித்தராமையா குற்றச்சாட்டு
x

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு பா.ஜனதா துரோகம் செய்துவிட்டதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சட்டபை தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா 600 வாக்குறுதிகளை வழங்கியது. இதில் எத்தனை வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்றியுள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிப்படி இந்த அரசு நடந்து கொள்ளவில்லை. மக்களுக்கு ஆளும் பா.ஜனதா துரோகம் செய்துவிட்டது.

கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய கடனை ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்வதாக கூறினர். அதை செய்யவில்லை. சட்டப்படி எஸ்.சி., எஸ்.டி. மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு ரூ.28 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இந்த அரசு 40 சதவீதம் கமிஷன் அரசு என்று ஒப்பந்ததாரர்கள் கூறியுள்ளனர்.

பொதுவாக ஒப்பந்ததாரர்கள் அரசுக்கு எதிராக பேச மாட்டார்கள். ஆனால் இந்த பா.ஜனதா அரசுக்கு எதிராக அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, 40 சதவீத கமிஷன் வழங்குமாறு வற்புறுத்துவதாக புகார் கூறினர். மக்களின் வரிப்பணத்தை பா.ஜனதாவினர் கொள்ளையடிக்கிறார்கள். கர்நாடகத்தின் கடன் ரூ.5½ லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர்.

பழங்குடியினருக்கு 7½ சதவீத இட ஒதுக்கீட்டை நாங்கள் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் வழங்குவோம் என்று மந்திரி ஸ்ரீராமுலு கூறினார். இது என்ன ஆனது?. தங்களின் தோல்விகளை மூடிமறைக்க மதம், உணவு பழக்கங்களை முன்னிலைக்கு கொண்டு வருகிறார்கள். நாட்டில் ஜனநாயகம், அரசியல் சாசனம் காக்கப்பட வேண்டும் என்றால் ஆட்சியில் இருந்து பா.ஜனதாவை விரட்டியடிக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story