வயதான, பணக்கார, ஆபத்தான நபர்; அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜை கடுமையாக விமர்சித்த ஜெய்சங்கர்


வயதான, பணக்கார, ஆபத்தான நபர்; அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜை கடுமையாக விமர்சித்த ஜெய்சங்கர்
x

அமெரிக்க பெரும் பணக்காரரும், முதலீட்டாளருமான ஜார்ஜ் சோரோஸ் இந்திய ஜனநாயகம், பிரதமர் மோடி குறித்து விமர்சித்தார்.

டெல்லி,

அமெரிக்க பெரும் பணக்காரரும் முதலீட்டாளருமான ஜார்ஜ் சோரோஸ் இந்தியா, பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்தார்.

பருவநிலை மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் என்ற தலைப்பில் ஜெர்மனியின் முனிச் நகரில் பாதுகாப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பேசிய ஜார்ஜ் சொரோஸ்,

இந்தியா சுவாரசியமான நாடு. இந்தியா ஜனநாயக நாடு ஆனால் அந்நாட்டின் தலைவர் நரேந்திரமோடி ஜனநாயகமானவர் அல்ல.

இஸ்லாமிய மதத்தினருக்கு எதிரான வன்முறையை தூண்டுதலே நரேந்திரமோடியின் வானலாவிய உயர்வுக்கு முக்கிய காரணம். திறந்த நிலை மற்றும் மூடிய நிலை சமுதாயத்துடன் மோடி நெருக்கமான உறவு கொண்டுள்ளார். அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய குவாட் அமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளது. ஆனால், மிகவும் தள்ளுபடி விலையில் ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி அதில் அதிக பணம் சம்பாதிக்கிறது.

மோடியும், தொழிலதிபர் அதானியும் நெருங்கிய கூட்டாளிகள். அவர்களின் விதி பின்னிப்பிணைந்துள்ளது. அதானி நிறுவனம் பங்குச்சந்தை மூலம் நிதி பெற முயற்சித்து தோல்வியடைந்தது. பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக அதானி மீது குற்றச்சாட்டு உள்ளது. அவரின் பங்குகள் சீட்டுக்கட்டு போல சரிந்துள்ளது. இந்த விவகாரத்தில் மோசி அமைதியாக உள்ளார். ஆனால், நாடாளுமன்றத்திலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்க வேண்டும்.

அதானி விவகாரம் இந்திய அரசில் மோடியின் வலிமையை குறைக்கும். மேலும், இது கட்டாயம் தேவைப்படும் நிறுவன சீர்திருத்தங்களுக்கான கதவுகளை உந்தி தள்ளும். நான் அனுபவமில்லாதவனாக இருக்கலாம், ஆனால் இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை நான் எதிர்பார்க்கிறேன்' என்றார்.

இந்திய ஜனநாயகம் மற்றும் இந்திய பிரதமர் மோடி குறித்து அமெரிக்க பெரும் பணக்காரரும் முதலீட்டாளருமான ஜார்ஜ் சொரோஸ் கூறிய விமர்சனங்களுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க பெரும் பணக்காரர் ஜார்ஜ் சோரோசுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கர் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் ஜார்ஜ் சோரோஸ் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்,

நான் வயதான, பணக்கார, கருத்துள்ள நபராக இருந்தால் நான் நிறுத்தக்கொள்ள முடிந்தால் இதை நான் ஒதுக்கிவிடுவேன். ஆனால், ஜார்ஜ் சோரோஸ் வயதான, பணக்கார, கருத்துள்ள மற்றும் ஆபத்தான நபர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே மாநாட்டில், இந்தியா லட்சக்கணக்கான இஸ்லாமிய மதத்தினரின் குடியுரிமையை பறிக்க திட்டமிட்டுள்ளதாக சோரோஸ் குற்றஞ்சாட்டினார்.

வெளிநாட்டு தலையீடு இருந்தால் அதன் ஆபத்து என்ன என்று எங்களுக்கு தெரியும். கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமை பறிக்கப்படுவது போல, இதுபோன்ற பயமுறுத்தலை நீங்கள் செய்தால், அது உண்மையில் நமது சமூக கட்டமைப்பிற்கு உண்மையான பாதிப்பை ஏற்படுத்தும்.

நாம் நினைக்கும் நபர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் நல்லது என்று அவரைப் போன்றவர்கள் நினைக்கும் வெவ்வேறு நாடுகளில் இதன் வெளிப்பாடுகள் உள்ளன.

ஒருவேளை நாம் எதிர்பார்க்காத முடிவுகள் தேர்தலில் வந்தால் நாம் குறையுள்ள ஜனநாயகம் என்று கூறுகிறோம்' என்றார்.


Next Story